(1)
விடையாரும் கொடியாய், வெறியார் மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே
(2)
மறையோர் வானவரும் தொழுதேத்தி வணங்கநின்ற
இறைவா எம்பெருமான், எனக்கு இன்னமுதாயவனே
கறையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சலென்னே
(3)
சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே, மடமாதிடம் கொண்டவனே
கலைசேர் கையினனே, திருக்கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே
(4)
செய்யார் மேனியனே, திருநீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா, மதயானை உரித்தவனே
கையார் சூலத்தினாய், திருக்கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே
(5)
சந்தார் வெண்குழையாய், சரிகோவண ஆடையனே
பந்தாரும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான் அடியேனையும் ஏன்று கொள்ளே
(6)
அரையார் கீளொடு கோவணமும் அரவும் அசைத்து
விரையார் கொன்றையுடன் விளங்கும்பிறை மேலுடையாய்
கரையாரும் வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அரையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே
(7)
பாரார் விண்ணவரும் பரவிப் பணிந்தேத்த நின்ற
சீரார் மேனியனே, திகழ்நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே அடியேனையும் அஞ்சலென்னே
(8)
நிலனே நீர்வளிதீ நெடு வானகமாகி நின்ற
புலனே, புண்டரிகத்தயன் மாலவன் போற்றி செய்யும்
கனலே, கற்பகமே, திருக்கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே.
(9)
வருங்காலன் உயிரை மடியத் திருமெல் விரலால்
பெரும்பாலன் தனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையே
கரும்பாரும் வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே
(10)
அலையார் தண்புனல் சூழ்ந்தழகாகி விழவமரும்
கலையார் மாதவர்சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச்
சிலையார் வாணுதலாள் நல்ல சிங்கடியப்பன் உரை
விலையார் மாலை வல்லார் வியன் மூவுலகு ஆள்பவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...