கற்குடி – சம்பந்தர் தேவாரம்:

<– கற்குடி

(1)
வடந்திகழ் மென்முலையாளைப் பாகமதாக மதித்துத்
தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்
இடம், திகழ் முப்புரிநூலர், துன்பமொடு இன்பமதெல்லாம்
கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மாமலையாரே
(2)
அங்கமொர் ஆறுடை வேள்வியான அருமறை நான்கும்
பங்கமில் பாடலோடு, ஆடல்பாணி பயின்ற படிறர்
சங்கமதார் குறமாதர் தங்கையில் மைந்தர்கள் தாவிக்
கங்குலின் மாமதி பற்றும் கற்குடி மாமலையாரே
(3)
நீரகலம்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத்
தாரகையின்ஒளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
போரகலம்தரு வேடர் புனத்திடையிட்ட விறகில்
காரகிலின் புகை விம்மும் கற்குடி மாமலையாரே
(4)
ஒருங்களி நீஇறைவா என்று உம்பர்கள் ஓலமிடக் கண்டு
இருங்களமார விடத்தை இன்னமுதுண்ணிய ஈசர்
மருங்களியார் பிடி வாயில் வாழ்வெதிரின் முளை வாரிக்
கருங்களி யானை கொடுக்கும் கற்குடி மாமலையாரே
(5)
போர்மலி திண்சிலை கொண்டு பூதகணம் புடை சூழப்
பார்மலி வேடுருவாகிப் பண்டொருவர்க்கருள் செய்தார்
ஏர்மலி கேழல் கிளைத்த வின்னொளி மாமணி எங்கும்
கார்மலி வேடர் குவிக்கும் கற்குடி மாமலையாரே
(6)
உலந்தவர் என்பதணிந்தே ஊரிடு பிச்சையராகி
விலங்கல்வில் வெங்கனலாலே மூவெயில் வேவ முனிந்தார்
நலந்தரு சிந்தையராகி நாமலி மாலையினாலே
கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மாமலையாரே
(7)
மான்இடமார்தரு கையர், மாமழு வாரும் வலத்தர்
ஊனிடையார் தலையோட்டில் உண்கலனாக உகந்தார்
தேனிடையார் தரு சந்தின் திண்சிறையால் தினை வித்திக்
கானிடை வேடர் விளைக்கும் கற்குடி மாமலையாரே
(8)
வாளமர் வீர நினைந்த இராவணன் மாமலையின் கீழ்த்
தோளமர் வன்தலை குன்றத் தொல் விரலூன்று துணைவர்
தாளமர் வேய்தலை பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க்
காளமதார் முகில் கீறும் கற்குடி மாமலையாரே
(9)
தண்டமர் தாமரையானும், தாவிஇம் மண்ணை அளந்து
கொண்டவனும் அறிவொண்ணாக் கொள்கையர், வெள்விடை ஊர்வர்
வண்டிசையாயின பாட நீடிய வார்பொழில் நீழல்
கண்டமர் மாமயிலாடும் கற்குடி மாமலையாரே
(10)
மூத்துவர் ஆடையினாரும், மூசு கடுப்பொடியாரும்
நாத்துவர் பொய்ம் மொழியார்கள் நயமிலரா மதி வைத்தார்
ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர்இடரெல்லாம்
காத்தவர், காமரு சோலைக் கற்குடி மாமலையாரே
(11)
காமரு வார்பொழில் சூழும் கற்குடி மாமலையாரை
நாமரு வண்புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம்பந்தன்
பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல்லார்கள்
பூமலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page