கற்குடி – அப்பர் தேவாரம்:

<– கற்குடி

(1)
மூத்தவனை வானவர்க்கு, மூவா மேனி
    முதலவனைத், திருஅரையில் மூக்கப் பாம்பொன்று
ஆர்த்தவனை, அக்கரவம் ஆரமாக
    அணிந்தவனைப், பணிந்தடியார் அடைந்த அன்போடு
ஏத்தவனை, இறுவரையில் தேனை, ஏனோர்க்கு
    இன்னமுதம் அளித்தவனை, இடரை எல்லாம்
காத்தவனைக், கற்குடியில் விழுமியானைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
(2)
செய்யானை வெளியானைக் கரியான் தன்னைத்
    திசைமுகனைத் திசையெட்டும் செறிந்தான் தன்னை
ஐயானை நொய்யானைச் சீரியானை
    அணியானைச் சேயானை, ஆனஞ்சாடும்
மெய்யானைப், பொய்யாதும் இல்லான் தன்னை
    விடையானைச் சடையானை, வெறித்த மான்கொள்
கையானைக், கற்குடியில் விழுமியானைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
(3)
மண்ணதனில் ஐந்தை, மாநீரில் நான்கை
    வயங்கெரியில் மூன்றை, மாருதத்து இரண்டை
விண்ணதனில் ஒன்றை, விரிகதிரைத்
    தண்மதியைத், தாரகைகள் தம்மில் மிக்க
எண்ணதனில் எழுத்தை ஏழிசையைக், காமன்
    எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக், கற்குடியில் விழுமியானைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
(4)
நற்றவனைப். புற்றரவ நாணினானை
    நாணாது நகுதலைஊண் நயந்தான் தன்னை
முற்றவனை, மூவாத மேனியானை
    முந்நீரின் நஞ்சமுகந்து உண்டான் தன்னைப்
பற்றவனைப், பற்றார்தம் பதிகள் செற்ற
    படையானை, அடைவார்தம் பாவம் போக்கக்
கற்றவனைக், கற்குடியில் விழுமியானைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
(5)
சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் தன்னைச்
    சங்கரனைத், தழலுறுதாள் மழுவாள் தாங்கும்
அங்கையனை, அங்கமணி ஆகத்தானை
    ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த
மங்கையனை, மதியொடு மாசுணமும் தம்மில்
    மருவவிரி சடைமுடிமேல் வைத்த வான்நீர்க்
கங்கையனைக், கற்குடியில் விழுமியானைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
(6)
பெண்ணவனை ஆணவனைப் பேடானானைப்
    பிறப்பிலியை இறப்பிலியைப், பேரா ஆணி
விண்ணவனை, விண்ணவர்க்கு மேலானானை
    வேதியனை, வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனைப், பண்ணில்வரு பயனானானைப்
    பாரவனைப், பாரில்வாழ் உயிர்கட்கு எல்லாம்
கண்ணவனைக், கற்குடியில் விழுமியானைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
(7)
பண்டானைப், பரந்தானைக், குவிந்தான் தன்னைப்
    பாரானை,  விண்ணாய் இவ்வுலகமெல்லாம்
உண்டானை, உமிழ்ந்தானை, உடையான் தன்னை
    ஒருவரும்தன் பெருமைதனை அறியவொண்ணா
விண்டானை, விண்டார்தம் புரங்கள் மூன்றும்
    வெவ்வழலில் வெந்து பொடியாகி வீழக்
கண்டானைக், கற்குடியில் விழுமியானைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
(8)
வானவனை, வானவர்க்கு மேலானானை
    வணங்கும் அடியார் மனத்துள் மருவிப் புக்க
தேனவனைத், தேவர் தொழு கழலான் தன்னைச்
    செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்
கோனவனைக், கொல்லை விடை ஏற்றினானைக்
    குழல்முழவம் இயம்பக் கூத்தாட வல்ல
கானவனைக், கற்குடியில் விழுமியானைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
(9)
கொலை யானை உரிபோர்த்த கொள்கையானைக்
    கோளரியைக் கூரம்பா வரைமேல் கோத்த
சிலையானைச், செம்மைதரு பொருளான் தன்னைத்
    திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த
தலையானைத், தத்துவங்கள் ஆனான் தன்னைத்
    தையலோர் பங்கினனைத் தன்கை ஏந்து
கலையானைக், கற்குடியில் விழுமியானைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
(10)
பொழிலானைப் பொழிலாரும் புன்கூரானைப்
    புறம்பயனை, அறம்புரிந்த புகலூரானை
எழிலானை, இடைமருதின் இடம் கொண்டானை
    ஈங்கோய் நீங்காதுறையும் இறைவன் தன்னை
அழலாடு மேனியனை, அன்று சென்றக்
    குன்றெடுத்த அரக்கன்தோள் நெரிய ஊன்றும்
கழலானைக், கற்குடியில் விழுமியானைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page