கருக்குடி:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி
நினைவிலும் எனக்கு வந்தெய்தும் நின்மலன்
கனைகடல் வையகம் தொழு கருக்குடி
அனலெரியாடும் எம்அடிகள் காண்மினே
(2)
வேதியன், விடையுடை விமலன், ஒன்னலர்
மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்
காதியல் குழையினன், கருக்குடி அமர்
ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே
(3)
மஞ்சுறு பொழில்வள மலி கருக்குடி
நஞ்சுறு திருமிடறுடைய நாதனார்
அஞ்சுரும்பார் குழல் அரிவை அஞ்சவே
வெஞ்சுரம்  தனில் விளையாடல் என்கொலோ
(4)
ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்
கானிடை ஆடலான் பயில் கருக்குடிக்
கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே
(5)
சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்
கூடுவர் உலகிடை ஐயம் கொண்டொலி
பாடுவர் இசைபறை கொட்ட, நட்டிருள்
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே
(6)
இன்புடையார் இசை வீணை, பூணரா
என்புடையார், எழில்மேனி மேலெரி
முன்புடையார், முதல் ஏத்தும் அன்பருக்கு
அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே
(7)
காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர்
கோலமும் முடி அரவணிந்த கொள்கையர்
சீலமும் உடையவர் திருக்கருக்குடிச்
சாலவும் இனிது அவருடைய தன்மையே
(8)
எறிகடல் புடைதழு இலங்கை மன்னனை
முறிபட வரையிடை அடர்த்த மூர்த்தியார்
கறைபடு பொழில்மதி தவழ் கருக்குடி
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே
(9)
பூமனும் திசைமுகன் தானும் பொற்பமர்
வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கெரி
ஆமென உயர்ந்தவன் அணி கருக்குடி
நாம் மனனில்வர நினைதல் நன்மையே
(10)
சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி
ஆக்கிய உரைகொளேல், அருந்திரு நமக்கு
ஆக்கிய அரனுறை அணி கருக்குடிப்
பூக்கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்மினே
(11)
கானலில் விரைமலர் விம்மு காழியான்
வானவன் கருக்குடி மைந்தன் தன்னொளி
ஆனமெய்ஞ் ஞானசம்பந்தன் சொல்லிய
ஊனமில் மொழி வலார்க்குயரும் இன்பமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page