(1)
பூங்கொடி மடவாள் உமையொரு பாகம், புரிதரு சடைமுடி அடிகள்
வீங்கிருள் நட்டமாடும்எம் விகிர்தர், விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலில் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழார் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(2)
சம்பரற்கருளிச் சலந்தரன் வீயத் தழலுமிழ் சக்கரம் படைத்த
எம்பெருமானார், இமையவரேத்த இனிதின் அங்குறைவிடம் வினவில்
அம்பரமாகி அழலுமிழ் புகையின் ஆகுதியால் மழைபொழியும்
உம்பர்களேத்தும் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(3)
பாங்குடைத் தவத்துப் பகீரதற்கருளிப் படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குதல் தவிர்த்துத் தராதலத்திழித்த தத்துவன் உறைவிடம் வினவில்
ஆங்கெரி மூன்றும் அமர்ந்துடனிருந்த அங்கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(4)
புற்றரவு அணிந்து நீறுமெய் பூசிப் பூதங்கள் சூழ்தர, ஊரூர்
பெற்றம்ஒன்றேறிப் பெய்பலி கொள்ளும் பிரான்அவன் உறைவிடம் வினவில்
கற்ற நால்வேதம் அங்கமோர் ஆறும் கருத்தினார், அருத்தியால் தெரியும்
உற்றபல் புகழார், ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(5)
நிலத்தவர், வானம் ஆள்பவர், கீழோர் துயர்கெட நெடியமாற்கருளால்
அலைத்த வல்லசுரர் ஆசற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில்
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையால் மிக்க
உலப்பில்பல் புகழார் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(6)
மணந்திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியுமாறு, அங்கம் ஐவேள்வி
இணைந்த நால்வேத மூன்றெரி இரண்டு பிறப்பென ஒருமையால் உணரும்
குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம்அற்றவை உற்றதும் எல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(7)
…
(8)
தலையொரு பத்தும் தடக்கையது இரட்டி தானுடை அரக்கன் ஒண்கயிலை
அலைவது செய்த அவன்திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில்
மலையென ஓங்கு மாளிகை நிலவு மாமதில் மாற்றலர் என்றும்
உலவுபல் புகழார் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(9)
கள்ளவிழ் மலர்மேல் இருந்தவன், கரியோன் என்றிவர் காண்பரிதாய
ஒள்ளெரி உருவர், உமையவளோடும் உகந்தினிது உறைவிடம் வினவில்
பள்ளநீர் வாளை பாய்தரு கழனிப் பனிமலர்ச் சோலை சூழாலை
ஒள்ளிய புகழார் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(10)
தெள்ளியர் அல்லாத் தேரரோடு, அமணர் தடுக்கொடு சீவரம் உடுக்கும்
கள்ளமார் மனத்துக் கலதிகட்கு அருளாக் கடவுளார் உறைவிடம் வினவில்
நள்ளிருள் யாம நான்மறை தெரிந்து, நலந்திகழ் மூன்றெரி ஓம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(11)
விளைதரு வயலுள் வெயில்செறி, பவள மேதிகண் மேய்புலத்து இடறி
ஒளிதர மல்கும் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அரனைக்
களிதரு நிவப்பில் காண்தகு செல்வக் காழியுண் ஞானசம்பந்தன்
அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்து இருப்பாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...