ஓணகாந்தன்தளி:

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சுந்தரர் தேவாரம்:

(1)
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
நித்தல் பூசனை செய்யலுற்றார்
கையில் ஒன்றும் காணமில்லைக்
கழலடி தொழுதுய்யின் அல்லால்
ஐவர் கொண்டிங்காட்ட ஆடி
ஆழ் குழிப்பட்டழுந்துவேனுக்கு
உய்யுமாறொன்றருளிச் செய்யீர்
ஓணகாந்தன் தளியுளீரே

(2)
திங்கள் தங்கு சடையின் மேலோர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல் வாய்திறவாள்
கணபதியேல் வயிறுதாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவியார் கோல்தட்டியாளார்
உங்களுக்காட் செய்ய மாட்டோம்
ஓணகாந்தன் தளியுளீரே

(3)
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணி உம்கழல் ஏத்துவார்கள்
மற்றோர் பற்றிலர் என்றிரங்கி
மதிஉடையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆவற்காலத்தடிகேள் உம்மை
ஒற்றி வைத்திங்குண்ணலாமோ
ஓணகாந்தன் தளியுளீரே

(4)
வல்லதெல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தினாலும் வாய் திறந்தொன்று
இல்லை என்னீர் உண்டும் என்னீர்
எம்மை ஆள்வான் இருப்பதென்நீர்
பல்லை உக்க படுதலையில்
பகலெலாம் போய்ப் பலிதிரிந்திங்கு
ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓணகாந்தன் தளியுளீரே

(5)
கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
கொண்ட பாணி குறைபடாமே
ஆடிப்பாடி அழுது நெக்கங்கு
அன்புடையவர்க்கின்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்தெய்த்தாலும்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஓடிப் போகீர் பற்றும் தாரீர்
ஓணகாந்தன் தளியுளீரே

(6)
வாரிரும்குழல் வாள்நெடுங்கண்
மலைமகள் மது விம்மு கொன்றைத்
தாரிரும் தடமார்பு நீங்காத்
தையலாள் உலகுய்ய வைத்த
காரிரும் பொழில் கச்சி மூதூர்க்
காமக் கோட்டம் உண்டாக நீர்போய்
ஊரிடும் பிச்சை கொள்வதென்னே
ஓணகாந்தன் தளியுளீரே

(7)
பொய்ம்மையாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
மேலை நாள் ஒன்றிடவும் கில்லீர்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
ஏதும் தாரீர் ஏதும் ஓதீர்
உம்மையன்றே எம்பெருமான்
ஓணகாந்தன் தளியுளீரே

(8)
வலையம் வைத்த கூற்றம் ஈவான்
வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலை அமைத்த சிந்தையாலே
திருவடீ தொழுதுய்யின் அல்லால்
கலை அமைத்த காமச் செற்றக்
குரோத லோப மதவரூடை
உலை அமைத்திங்கொன்ற மாட்டேன்
ஓணகாந்தன் தளியுளீரே

(9)
வாரமாகித் திருவடிக்குப்
பணிசெய் தொண்டர் பெறுவதென்னே
ஆரம் பாம்பு வாழ்வதாரூர்
ஒற்றியூரேல் உம்மதன்று
தாரமாகக் கங்கையாளைச்
சடையில் வைத்த அடிகேள் உந்தம்
ஊரும் காடு உடையும் தோலே
ஓணகாந்தன் தளியுளீரே

(10)
ஓவணம்மேல் எருதொன்றேறும்
ஓணகாந்தன்தளியுளார் தாம்
ஆவணம் செய்தாளும் கொண்ட
வரை துகில்லொடு பட்டு வீக்கிக்
கோவணம் மேல் கொண்ட வேடம்
கோவையாக ஆரூரன் சொன்ன
பாவணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப்
பறையும் தாம்செய்த பாவம் தானே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page