(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
சம்பந்தர் தேவாரம்:
(1)
மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, மாசிலாச்சீர் மறைக்காடு, நெய்த்தானம்
நிலையினான், எனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந்தேறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடும் துயிலக் கானலம்பெடை புல்கிக் கண மயிலாலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வது இயல்பே
(2)
திருமலர்க் கொன்றையான், நின்றியூர் மேயான், தேவர்கள் தலைமகன், திருக்கழிப்பாலை
நிருமலன், எனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந்தேறிய நிமலன்
கருமலர்க் கமழ்சுனை நீண்மலர்க் குவளை கதிர்முலை இளையவர் மதி முகத்துலவும்
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வது இயல்பே
(3)
பாலனாம், விருத்தனாம், பசுபதி தானாம், பண்டு வெங்கூற்றுதைத்து அடியவர்க்கருளும்
காலனாம், எனதுரை தனதுரையாகக் கனலெரி அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனை வண்டுபண்செய்ய நீர்மலர்க் குவளைகள் தாதுவிண்டோங்கும்
ஏலநாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வது இயல்பே
(4)
உளம்கொள்வார் உச்சியார், கச்சி ஏகம்பன், ஒற்றியூர்உறையும் அண்ணாமலை அண்ணல்
விளம்புவான் எனதுரை தனதுரையாக வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்
குளம்புறக் கலைதுள மலைகளும் சிலம்பக் கொழுங்கொடி எழுந்தெங்கும் கூவிளம் கொள்ள
இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வது இயல்பே
(5)
தேனுமாய் அமுதமாய்த் தெய்வமும் தானாய்த், தீயொடு நீருடன் வாயுவாம் தெரியில்
வானுமாம், எனதுரை தனதுரையாக வரிஅரா அரைக்கசைத்துழி தரு மைந்தன்
கானமான் வெருவுறக் கருவிரல்ஊகம் கடுவனோடுகளும்ஊர், கற்கடுஞ் சாரல்
ஏனமான் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வது இயல்பே
(6)
மனமுலாம் அடியவர்க்கருள் புரிகின்ற வகையலால் பலிதிரிந்துண்பிலான், மற்றோர்
தனமிலான், எனதுரை தனதுரையாகத் தாழ்சடை இளமதி தாங்கிய தலைவன்
புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம் பொன்னொடு மணிகொழித்தீண்டி வந்தெங்கும்
இனமெலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வது இயல்பே
(7)
நீருளான் தீயுளான் அந்தரத்துள்ளான், நினைப்பவர் மனத்துளான், நித்தமா ஏத்தும்
ஊருளான், எனதுரை தனதுரையாக ஒற்றை வெள்ளேறுகந்தேறிய ஒருவன்
பாருளார் பாடலோடாடலறாத பண் முரன்றஞ்சிறை வண்டினம்பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வது இயல்பே
(8)
வேருலாம் ஆழ்கடல் வருதிரை இலங்கை வேந்தன தடக்கைகள் அடர்த்தவன், உலகில்
ஆருலாம், எனதுரை தனதுரையாக ஆகமோர் அரவணிந்துழி தரும் அண்ணல்
வாருலா நல்லன மாக்களும்சார வாரணம் உழிதரு மல்லலங்கானல்
ஏருலாம் பொழிலணி இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வது இயல்பே
(9)
கிளர்மழை தாங்கினான், நான்முகம் உடையோன் கீழடி மேல்முடி தேர்ந்தளக்கில்லா
உளமழை எனதுரை தனதுரையாக ஒள்ளழல் அங்கையில் ஏந்திய ஒருவன்
வளமழை எனக்கழை வளர்துளி சோர, மாசுணம் உழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வது இயல்பே
(10)
உரிஞ்சன கூறைகள் உடம்பினராகி உழிதரு சமணரும் சாக்கியப் பேய்கள்
பெருஞ்செல்வன் எனதுரை தனதுரையாகப் பெய் பலிக்கென்றுழல் பெரியவர் பெருமான்
கருஞ்சினை முல்லைநன் பொன்னடை வேங்கை களிமுக வண்டொடு தேனின முரலும்
இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வது இயல்பே
(11)
கந்தனை மலிகனை கடலொலிஓதம் கானலம் கழிவளர் கழுமலம்என்னும்
நந்தியார் உறைபதி நான்மறை நாவன் நற்றமிழ்க்கின் துணை ஞானசம்பந்தன்
எந்தையார் வளநகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய்
வெந்துயர் கெடுகிட விண்ணவரோடும் வீடு பெற்றிம்மையின் வீடெளிதாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...