இன்னம்பர் – சம்பந்தர் தேவாரம்:

<-- இன்னம்பர்

(1)
எண்திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
வண்டிசைக்கும் சடையீரே
வண்டிசைக்கும் சடையீர் உமை வாழ்த்துவார்
தொண்டிசைக்கும் தொழிலோரே
(2)
யாழ் நரம்பின்இசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடியீரே
தாழ்தரு சடைமுடியீர் உமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை இலரே
(3)
இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய
வளமதி வளர்சடையீரே
வளமதி வளர்சடையீர் உமை வாழ்த்துவார்
உளமதி மிக உடையோரே
(4)
இடிகுரலிசை முரல் இன்னம்பர் மேவிய
கடிகமழ் சடைமுடியீரே
கடிகமழ் சடைமுடியீர் உம கழல்தொழும்
அடியவர் அருவினை இலரே
(5)
இமையவர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
உமையொரு கூறுடையீரே
உமையொரு கூறுடையீர் உமை உள்குவார்
அமைகிலர் ஆகிலர் அன்பே
(6)
எண்ணரும் புகழுடை இன்னம்பர் மேவிய
தண்ணரும் சடைமுடியீரே
தண்ணரும் சடைமுடியீர் உமைச் சார்பவர்
விண்ணவர் அடைவுடையோரே
(7)
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய
நிழல்திகழ் மேனியினீரே
நிழல்திகழ் மேனியினீர் உமை நினைபவர்
குழறிய கொடுவினை இலரே
(8)
ஏத்தரும் புகழணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவு செய்தீரே
தூர்த்தனைத் தொலைவு செய்தீர் உமைத் தொழுபவர்
கூர்த்தநல் குணமுடையோரே
(9)
இயலுளோர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
அயனுமால் அறிவரியீரே
அயனுமால் அறிவரியீர் உமதடி தொழும்
இயலுளார் மறுபிறப்பிலரே
(10)
ஏரமர் பொழிலணி இன்னம்பர் மேவிய
தேரமண் சிதைவு செய்தீரே
தேரமண் சிதைவு செய்தீர் உமைச் சேர்பவர்
ஆர்துயர் அருவினை இலரே
(11)
ஏடமர் பொழிலணி இன்னம்பர் ஈசனை
நாடமர் ஞானசம்பந்தன்
நாடமர் ஞானசம்பந்தன நற்றமிழ்
பாட வல்லார் பழியிலரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page