இன்னம்பர் – அப்பர் தேவாரம் (2):

<– இன்னம்பர்

(1)
மன்னு மலைமகள் கையால் வருடின, மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருளாயின, தூக்கமலத்து
அன்ன வடிவின, அன்புடைத் தொண்டர்க்கு அமுதரும்பி
இன்னல் களைவன, இன்னம்பரான்  தன் இணையடியே
(2)
பைதல் பிணக்குழைக் காளி வெங்கோபம் பங்கப்படுப்பான்
செய்தற்கரிய திருநடம் செய்தன, சீர்மறையோன்
உய்தற் பொருட்டு வெங்கூற்றை உதைத்தன, உம்பர்க்கெல்லாம்
எய்தற்கரியன, இன்னம்பரான் தன் இணையடியே
(3)
சுணங்கு நின்றார் கொங்கையாள் உமைசூடின தூமலரால்
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின, மன்னு மறைகள் தம்மில்
பிணங்கிநின்று இன்னனவென்று அறியாதன, பேய்க்கணத்தோடு
இணங்கி நின்றாடின, இன்னம்பரான் தன் இணையடியே
(4)
ஆறொன்றிய சமயங்களின் அவ்வவர்க்கு அப்பொருள்கள்
வேறொன்றிலாதன, விண்ணோர் மதிப்பன, மிக்குவமன்
மாறொன்றிலாதன, மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறொன்றிலாதன, இன்னம்பரான் தன் இணையடியே
(5)
அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றினால் அடல்அங்கியின் வாய்க்
கரக்கமுன் வைதிகத் தேர்மிசை நின்றன, கட்டுருவம்
பரக்க வெங்கானிடை வேடுருவாயின, பல்பதி தோறும்
இரக்க நடந்தன, இன்னம்பரான் தன் இணையடியே
(6)
கீண்டும் கிளர்ந்தும் பொற்கேழல் முன் தேடின, கேடுபடா
ஆண்டும் பலபல ஊழியும் ஆயின, வாரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்றாடின, மேவுசிலம்பு
ஈண்டும் கழலின, இன்னம்பரான் தன் இணையடியே
(7)
போற்றும் தகையன, பொல்லா முயலகன் கோபப் புன்மை
ஆற்றும் தகையன, ஆறு சமயத்தவர் அவரைத்
தேற்றும் தகையன, தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றும் தகையன, இன்னம்பரான் தன் இணையடியே
(8)
பயம்புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன, பார்ப்பதி தன்
குயம்பொன்மை மாமலராகக் குலாவின, கூடவொண்ணாச்
சயம்பு என்றேதகு தாணு என்றே சதுர் வேதங்கள்நின்று
இயம்பும் கழலின, இன்னம்பரான் தன் இணையடியே
(9)
அயனொடு மால் இந்திரன் சந்த்ராதித்தர் அமரரெலாம்
சயசய என்று முப்போதும் பணிவன, தண்கடல்சூழ்
வியநிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியனகர்க்கும்
இயபரம் ஆவன, இன்னம்பரான் தன் இணையடியே
(10)
தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன, தாமரைப்போது
உருக்கிய செம்பொன் உவமன் இலாதன, ஒண்கயிலை
நெருக்கிய வாளரக்கன் தலைபத்து நெரித்தவன் தன்
இருக்கியல்பாயின, இன்னம்பரான் தன் இணையடியே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page