(1)
விண்ணவர் மகுட கோடி மிடைந்த சேவடியர் போலும்
பெண்ணொரு பாகர் போலும், பேடலி ஆணர் போலும்
வண்ணமால் அயனும் காணா மால்வரை எரியர் போலும்
எண்ணுரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(2)
பன்னிய மறையர் போலும், பாம்பரை உடையர் போலும்
துன்னிய சடையர் போலும், தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும், மாதிட மகிழ்வர் போலும்
என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(3)
மறியொரு கையர் போலும், மாதுமை உடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப் பணிகொள வல்லர் போலும்
செறிவுடை அங்க மாலை சேர்திரு உருவர் போலும்
எறிபுனல் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(4)
விடமலி கண்டர் போலும், வேள்வியை அழிப்பர் போலும்
கடவுநல் விடையர் போலும், காலனைக் காய்வர் போலும்
படமலி அரவர் போலும், பாய்புலித் தோலர் போலும்
இடர் களைந்தருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(5)
அளிமலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை உடையர் போலும்
களிமயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும்
வெளிவளர் உருவர் போலும், வெண்பொடி அணிவர் போலும்
எளியவர் அடியர்க்கென்றும் இன்னம்பர் ஈசனாரே
(6)
கணையமர் சிலையர் போலும், கரியுரி உடையர் போலும்
துணையமர் பெண்ணர் போலும், தூமணிக் குன்றர் போலும்
அணையுடை அடியர்கூடி அன்பொடு மலர்கள் தூவும்
இணையடி உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(7)
பொருப்பமர் புயத்தர் போலும், புனலணி சடையர் போலும்
மருப்பிள ஆமை தாங்கு மார்பில் வெண்ணூலர் போலும்
உருத்திர மூர்த்தி போலும், உணர்விலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(8)
காடிடம் உடையர் போலும், கடிகுரல் விளியர் போலும்
வேடுரு உடையர் போலும், வெண்மதிக் கொழுந்தர் போலும்
கோடலர் வன்னி தும்பை கொக்கிறகலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(9)
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண்தோளர் போலும்
நீறுடை உருவர் போலும், நினைப்பினை அரியர் போலும்
பாறுடைத் தலைகை ஏந்திப் பலிதிரிந்துண்பர் போலும்
ஏறுடைக் கொடியர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(10)
ஆர்த்தெழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்
பார்த்தனோடமர் பொருது படை கொடுத்தருள்வர் போலும்
தீர்த்தமாம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்
ஏத்தஏழ் உலகும் வைத்தார் இன்னம்பர் ஈசனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...