ஆக்கூர் – சம்பந்தர் தேவாரம்:

<– ஆக்கூர் 

(1)
அக்கிருந்த வாரமும் ஆடரவும் ஆமையும்
தொக்கிருந்த மார்பினான், தோலுடையான், வெண்ணீற்றான்
புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
(2)
நீரார வார்சடையான், நீறுடையான், ஏறுடையான்
காரார் பூங்கொன்றையினான் காதலித்த தொல்கோயில்
கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்தில்
தாராமல் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
(3)
வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் தன்மடந்தை
தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
(4)
கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப்
பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கம்ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
(5)
வீக்கினான் ஆடரவம், வீழ்ந்தழிந்தார் வெண்தலை என்பு
ஆக்கினான் பல கலன்கள், ஆதரித்துப் பாகம் பெண்
ஆக்கினான், தொல்கோயில் ஆம்பலம் பூம்பொய்கை புடை
தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
(6)
பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோடு ஆடலினான்
கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்
விண்ணொளிசேர் மாமதியம் தீண்டியக்கால் வெண்மாடம்
தண்ணொளிசேர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
(7)
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சும் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோடு ஆறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
(8)
கன்னெடிய குன்றெடுத்தான் தோள்அடரக் காலூன்றி
இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்கோயில்
பொன்னடிக்கே நாள்தொறும் பூவோடு நீர்சுமக்கும்
தன்னடியார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
(9)
நன்மையான் நாரணனும், நான்முகனும் காண்பரிய
தொன்மையான், தோற்றம் கேடில்லாதான் தொல்கோயில்
இன்மையால் சென்றிரந்தார்க்கில்லை என்னாது ஈந்துவக்கும்
தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
(10)
நாமருவு புன்மை நவிற்றச் சமண்தேரர்
பூமருவு கொன்றையினான் புக்கமரும் தொல்கோயில்
சேன்மருவு பைங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை
தாமருவு ஆக்கூரில் தான்தோன்றி மாடமே
(11)
ஆடல் அமர்ந்தானை, ஆக்கூரில் தான்தோன்றி
மாடம் அமர்ந்தானை, மாடம்சேர் தண்காழி
நாடற்கரிய சீர் ஞானசம்பந்தன் சொல்
பாடல் இவைவல்லார்க்கு இல்லையாம் பாவமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page