ஆக்கூர் – அப்பர் தேவாரம்:

<– ஆக்கூர்

(1)
முடித்தாமரை அணிந்த மூர்த்தி போலும்
    மூவுலகும் தாமாகி நின்றார் போலும்
கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும்
    கல்லலகு பாணி பயின்றார் போலும்
கொடித்தாமரைக் காடே நாடும் தொண்டர்
    குற்றேவல் தாம்மகிழ்ந்த குழகர் போலும்
அடித்தாமரை மலர்மேல் வைத்தார் போலும்
    ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே
(2)
ஓதிற்றொரு நூலும் இல்லை போலும்
    உணரப்படாததொன்றில்லை போலும்
காதிற் குழையிலங்கப் பெய்தார் போலும்
    கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும்
வேதத்தோடாறங்கம் சொன்னார் போலும்
    விடஞ்சூழ்ந்திருண்ட மிடற்றார் போலும்
ஆதிக் களவாகி நின்றார் போலும்
    ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே
(3)
மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்
    மணிநீல கண்டம் உடையார் போலும்
நெய்யார் திரிசூலம் கையார் போலும்
    நீறேறு தோள் எட்டுடையார் போலும்
வையார் மழுவாள் படையார் போலும்
    வளர் ஞாயிறன்ன ஒளியார் போலும்
ஐவாய் அரவமொன்றார்த்தார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி அப்பனாரே
(4)
வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்
    வஞ்சக் கருங்கடல் நஞ்சுண்டார் போலும்
பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்
    பூங்கங்கை தோய்ந்த சடையார் போலும்
கடிவிளங்கு கொன்றையந்தாரார் போலும்
    கட்டங்கம் ஏந்திய கையார் போலும்
அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி அப்பனாரே
(5)
ஏகாசமாம் புலித்தோல் பாம்பு தாழ
    இடுவெண் தலைகலனா ஏந்தி நாளும்
மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை
    புனலார் சடைமுடிமேல் புனைந்தார் போலும்
மாகாசமாய வெண்ணீரும் தீயும்
    மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்
ஆகாசம் என்றிவையும் ஆனார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி அப்பனாரே
(6)
மாதூரும் வாள்நெடுங்கண் செவ்வாய் மென்தோள்
    மலைமகளை மார்பத்தணைத்தார் போலும்
மூதூர் முதுதிரைகள் ஆனார் போலும்
    முதலும் இறுதியும் இல்லார் போலும்
தீதூர நல்வினையாய் நின்றார் போலும்
    திசையெட்டும் தாமேயாம் செல்வர் போலும்
ஆதிரை நாளா அமர்ந்தார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி அப்பனாரே
(7)
மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்
    மான்தோல் உடையா மகிழ்ந்தார் போலும்
கோலானைக் கோஅழலால் காய்ந்தார் போலும்
    குழவிப் பிறைசடைமேல் வைத்தார் போலும்
காலனைக் காலால் கடந்தார் போலும்
    கயிலாயம் தம்மிடமாக் கொண்டார் போலும்
ஆல்ஆனைந்தாடல் உகப்பார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி அப்பனாரே
(8)
கண்ணார்ந்த நெற்றியுடையார் போலும்
    காமனையும் கண்ணழலால் காய்ந்தார் போலும்
உண்ணா அருநஞ்சம் உண்டார் போலும்
    ஊழித்தீ அன்ன ஒளியார் போலும்
எண்ணாயிரம் கோடி பேரார் போலும்
    ஏறேறிச் செல்லும் இறைவர் போலும்
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி அப்பனாரே
(9)
கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை
    கதிர்போது தாதணிந்த கண்ணி போலும்
நெடியான் சதுர்முகனும் நேட நின்ற
    நீலநற் கண்டத்திறையார் போலும்
படியேல் அழல்வண்ணம் செம்பொன் மேனி
    மணிவண்ணம் தம்வண்ணம் ஆவார் போலும்
அடியார் புகலிடமதானார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி அப்பனாரே
(10)
திரையானும் செந்தாமரை மேலானும்
    தேர்ந்தவர்கள் தாம் தேடிக் காணார் நாணும்
புரையான் எனப்படுவார் தாமே போலும்
    போரேறு தாமேறிச் செல்வார் போலும்
கரையா வரைவில்லே நாகம் நாணாக்
    காலத் தீயன்ன கனலார் போலும்
வரையார் மதிலெய்த வண்ணர் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி அப்பனாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page