(1)
மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே
துன்னும் கடல் நஞ்சிருள் தோய் கண்டர், தொல்மூதூர்
அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு
பொன்னும் மணியும் பொருதென் கரைமேல் புத்தூரே
(2)
மேவாசுரர் மேவெயில்வேவ மலைவில்லால்
ஏவார் எரி வெங்கணையால் எய்தான் எய்துமூர்
நாவால் நாதன் நாமம்ஓதி நாள்தொறும்
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே
(3)
பல்லார் தலைசேர் மாலை சூடிப் பாம்பும்பூண்டு
எல்லா இடமும் வெண்ணீறணிந்தோர் ஏறேறிக்
கல்லார் மங்கை பங்கரேனும் காணுங்கால்
பொல்லார் அல்லர் அழகியர் புத்தூர்ப் புனிதரே
(4)
வரியேர் வளையாள் அரிவையஞ்ச வருகின்ற
கரியேர் உரிவை போர்த்த கடவுள் கருதுமூர்
அரியேர் கழனிப் பழனம் சூழ்ந்தங்கழகாய
பொரியேர் புன்குசொரி பூஞ்சோலைப் புத்தூரே
(5)
என்போடரவம் ஏனத்தெயிறோடு எழிலாமை
மின்போல் புரிநூல் விரவிப் பூண்ட மணிமார்பர்
அன்போடு உருகும் அடியார்க்கன்பர் அமருமூர்
பொன்போதலர் கோங்கோங்கு சோலைப் புத்தூரே
(6)
வள்ளிமுலை தோய் குமரன் தாதை, வான்தோயும்
வெள்ளி மலைபோல் விடையொன்றுடையான் மேவுமூர்
தெள்ளி வருநீர் அரிசில் தென்பால் சிறைவண்டும்
புள்ளுமலி பூம்பொய்கை சூழ்ந்த புத்தூரே
(7)
நிலம் தணீரோடு அனல்கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கண் சோழனாகச் செய்தான்ஊர்
அலந்த அடியான் அற்றைக்கன்றோர் காசெய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே
(8)
இத்தேர்ஏக இம்மலை பேர்ப்பன் என்றேந்தும்
பத்தோர் வாயான் வரைக் கீழலறப் பாதம்தான்
வைத்தார் அருள்செய் வரதன் மருவும் ஊரான
புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே
(9)
முள்ளார் கமலத்தயன் மால் முடியோடு அடிதேட
ஒள்ளார் எரியாய் உணர்தற்கரியான் ஊர் போலும்
கள்ளார் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள்
புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே
(10)
கையார் சோறு கவர் குண்டர்களும், துவருண்ட
மெய்யார் போர்வை மண்டையர் சொல்லும் மெய்யல்ல
பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா என்பார்க்கு ஐயுறவின்றி அழகாமே
(11)
நறவம் கமழ் பூங்காழி ஞானசம்பந்தன்
பொறிகொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்
செறிவண் தமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள்
அறவன் கழல் சேர்ந்தன்போடு இன்பம் அடைவாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...