அரிசில்கரைப்புத்தூர் – சுந்தரர் தேவாரம்:

<– அரிசில்கரைப்புத்தூர்

(1)
மலைக்கும் மகள்அஞ்ச மதகரியை
    உரித்தீர், எரித்தீர் வரு முப்புரங்கள்
சிலைக்கும் கொலைச் சேவுகந்தேறொழியீர்
    சில்பலிக்கு இல்கள் தோறும் செலவொழியீர்
கலைக்கொம்பும் கரிமருப்பும் இடறிக்
    கலவம் மயிற்பீலியும் காரகிலும்
அலைக்கும் புனல்சேர் அரிசில்தென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே
(2)
அருமலரோன் சிரம் ஒன்றறுத்தீர்
    செறுத்தீர் அழற்சூலத்தில் அந்தகனைத்
திருமகள்கோன் நெடுமால் பலநாள்
    சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத்தில் குறைவா
    நிறைவாகஓர் கண்மலர் சூட்டலுமே
பொருவிறல் ஆழி புரிந்தளித்தீர்
    பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே
(3)
தரிக்கும்தரை நீர்தழல் காற்றுஅந்தரம்
    சந்திரன் சவிதா இயமானன் ஆனீர்
சரிக்கும் பலிக்குத் தலை அங்கை ஏந்தித்
    தையலார் பெய்யக் கொள்வது தக்கதன்றால்
முரிக்கும் தளிர்ச் சந்தனத்தோடு வேயும்
    முழங்கும் திரைக் கைகளால் வாரிமோதி
அரிக்கும் புனல்சேர் அரிசில் தென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே
(4)
கொடியுடை மும்மதில் வெந்தழியக்
    குன்றம் வில்லா நாணியில் கோல்ஒன்றினால்
இடிபட எய்தெரித்தீர் இமைக்கும்
    அளவில், உமக்கார் எதிர் எம்பெருமான்
கடிபடு பூங்கணையான் கருப்புச்
    சிலைக் காமனை வேவக் கடைக் கண்ணினால்
பொடிபட நோக்கியது என்னை கொல்லோ
    பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே
(5)
வணங்கித் தொழுவார்அவர் மால்பிரமன்
    மற்றும் வானவர் தானவர் மாமுனிவர்
உணங்கல் தலையில் பலிகொண்டல் என்னே
    உலகங்களெல்லாம் உடையீர் உரையீர்
இணங்கிக் கயல்சேல் இளவாளை பாய
    இனக்கெண்டை துள்ளக் கண்டிருந்த அன்னம்
அணங்கிக் குணங்கொள் அரிசில் தென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே
(6)
அகத்தடிமை செய்யும் அந்தணன் தான்
    அரிசில்புனல் கொண்டு வந்தாட்டுகின்றான்
மிகத் தளர்வெய்திக் குடத்தையும் நும்
    முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும்
வகுத்தவனுக்கு நித்தற் படியும்
    வரும் என்றொரு காசினை, நின்ற நன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
    பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே
(7)
பழிக்கும் பெருந்தக்கன் எச்சமழியப்
    பகலோன் முதலாப்பல தேவரையும்
தெழித்திட்டவர், அங்கம் சிதைத்தருளும்
    செய்கை என்னை கொலோ, மைகொள் செம்மிடற்றீர்
விழிக்கும்தழைப் பீலியொடு ஏலமுந்தி
    விளங்கும்மணி முத்தொடு பொன்வரன்றி
அழிக்கும் புனல்சேர் அரிசில் தென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே
(8)
பறைக்கண் நெடும் பேய்க்கணம் பாடல்செய்யக்
    குறள் பாரிடங்கள் பறைதாம் முழக்கப்
பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம்
    பெருங்காடரங்காக நின்றாடல் என்னே
கறைக்கொள் மணிகண்டமும் திண்தோள்களும்
    கரங்கள் சிரம் தன்னிலும் கச்சுமாகப்
பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும்
    பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே
(9)
மழைக்கண் மடவாளைஒர் பாகம்வைத்தீர்
    வளர்புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
முழைக்கொள் அரவோடென்பு அணிகலனா
    முழுநீறுமெய் பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள் கரும்பும் கதலிக்கனியும்
    கமுகின்பழுக் காயும் கவர்ந்து கொண்டிட்டு
அழைக்கும் புனல்சேர் அரிசில் தென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே
(10)
கடிக்கும் அரவால் மலையால் அமரர்
    கடலைக் கடையவ்வெழு காளகூடம்
ஒடிக்கும் உலகங்களை என்றதனை
    உமக்கே அமுதாக உண்டீர் உமிழீர்
இடிக்கும்மழை வீழ்த்து இழுத்திட்டருவி
    இருபாலும் ஓடி இரைக்கும் திரைக்கை
அடிக்கும் புனல்சேர் அரிசில் தென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே
(11)
காரூர்மழை பெய்து பொழிஅருவிக்
    கழையோடகில் உந்திட்டிருகரையும்
போரூர் புனல்சேர் அரிசில் தென்கரைப்
    பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதர் தம்மை
ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடைந்து
    அழகால் உரைப்பார்களும் கேட்பவரும்
சீரூர்தரு தேவர் கணங்களொடும்
    இணங்கிச் சிவலோகம் எய்துவரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page