அரிசில்கரைப்புத்தூர் – அப்பர் தேவாரம்:

<– அரிசில்கரைப்புத்தூர்

(1)
முத்தூரும் புனல் மொய் அரிசில்கரைப்
புத்தூரன் அடி போற்றி என்பார்எலாம்
பொய்த்தூரும் புலன்ஐந்தொடு புல்கிய
மைத்தூரும் வினை மாற்றவும் வல்லரே
(2)
பிறைக்கணிச் சடைஎம் பெருமானென்று
கறைக்கணித்தவர் கண்ட வணக்கத்தாய்
உறக்கணித்துருகா மனத்தார்களைப்
புறக்கணித்திடும் புத்தூர்ப் புனிதரே
(3)
அரிசிலின் கரைமேல் அணியார்தரு
புரிசைநம் திருப்புத்தூர்ப் புனிதனைப்
பரிசொடும் பரவிப் பணிவார்க்கெலாம்
துரிசில் நன்னெறி தோன்றிடும் காண்மினே
(4)
வேதனை, மிகு வீணையில் மேவிய
கீதனைக், கிளரும் நறுங்கொன்றையம்
போதனைப், புனல்சூழ்ந்த புத்தூரனை
நாதனை நினைந்தென் மனம் நையுமே
(5)
அருப்புப் போல் முலையார் அல்லல் வாழ்க்கைமேல்
விருப்புச் சேர்நிலை விட்டு, நல்இட்டமாய்த்
திருப்புத்தூரனைச் சிந்தை செயச்செயக்
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும் காண்மினே
(6)
பாம்பொடு மதியும் படர் புன்சடைப்
பூம்புனலும் பொதிந்த புத்தூர்உளான்
நாம் பணிந்தடி போற்றிட நாள்தொறும்
சாம்பல் என்பு தனக்கணி ஆகுமே
(7)
கனல் அங்கை தனிலேந்தி வெங்காட்டிடை
அனலங்கெய்தி நின்றாடுவர் பாடுவர்
பினலம் செஞ்சடை மேல் பிறையும் தரு
புனலும் சூடுவர் போலும் புத்தூரரே
(8)
காற்றினும் கடிதாகி நடப்பதோர்
ஏற்றினும் இசைந்தேறுவர், என்பொடு
நீற்றினை அணிவர், நினைவாய்த் தமைப்
போற்றி என்பவர்க்கன்பர் புத்தூரரே
(9)
முன்னும் முப்புரம் செற்றனர் ஆயினும்
அன்னம் ஒப்பர் அலந்தடைந்தார்க்கெலாம்
மின்னும் ஒப்பர் விரிசடை மேனிசெம்
பொன்னும் ஒப்பர் புத்தூரெம் புனிதரே
(10)
செருத்தனால் தன தேர் செல உய்த்திடும்
கருத்தனாய்க் கயிலை எடுத்தான் உடல்
பருத்த தோள் கெடப் பாதத்தொரு விரல்
பொருத்தினார் பொழிலார்ந்த புத்தூரரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page