அரதைப் பெரும்பாழி:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
பைத்த பாம்போடு அரைக் கோவணம், பாய்புலி
மொய்த்த பேய்கள் முழக்க முதுகாட்டிடை
நித்தமாக நடமாடி, வெண்ணீறணி
பித்தர் கோயில் அரதைப் பெரும்பாழியே
(2)
கயல சேல கருங்கண்ணியர் நாள்தொறும்
பயலை கொள்ளப் பலி தேர்ந்துழல் பான்மையார்
இயலை வானோர் நினைந்தோர்களுக்கு எண்ணரும்
பெயரர், கோயில் அரதைப்பெரும் பாழியே
(3)
கோடல் சால உடையார், கொலை யானையின்
மூடல் சால உடையார், முளி கானிடை
ஆடல்சால உடையார், அழகாகிய
பீடர் கோயில் அரதைப் பெரும் பாழியே
(4)
மண்ணர் நீரார் அழலார், மலி காலினார்
விண்ணர், வேதம் விரித்தோதுவார், மெய்ப்பொருள்
பண்ணர் பாடல் உடையார், ஒரு பாகமும்
பெண்ணர், கோயில் அரதைப்பெரும் பாழியே
(5)
மறையர், வாயின்மொழி மானொடு வெண்மழுக்
கறைகொள் சூலமுடைக் கையர், காரார் தரும்
நறைகொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னிமேல்
பிறையர், கோயில் அரதைப்பெரும் பாழியே
(6)
புற்றரவம் புலித்தோல் அரைக் கோவணம்
தற்றிரவில் நடமாடுவர், தாழ்தரு
சுற்றமர் பாரிடம் தொல்கொடியின் மிசைப்
பெற்றர் கோயில் அரதைப்பெரும் பாழியே
(7)
துணையிறுத்தஞ்சுரி சங்கமர் வெண்பொடி
இணையில் ஏற்றை உகந்தேறுவரும், எரி
கணையினால் முப்புரம் செற்றவர், கையினில்
பிணையர், கோயில் அரதைப்பெரும் பாழியே
(8)
சரிவிலா வல்லரக்கன் தடந்தோள் தலை
நெரிவிலார அடர்த்தார், நெறி மென்குழல்
அரிவை பாகம் அமர்ந்தார், அடியாரொடும்
பிரிவில் கோயில் அரதைப்பெரும் பாழியே
(9)
வரியரா என்பணி மார்பினர், நீர்மல்கும்
எரியராவும் சடைமேல் பிறையேற்றவர்
கரியமாலோடு அயன் காண்பரிதாகிய
பெரியர் கோயில் அரதைப்பெரும் பாழியே
(10)
நாணிலாத சமண் சாக்கியர் நாள்தொறும்
ஏணிலாத மொழிய,  எழிலாயவர்
சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர்
பேணு கோயில் அரதைப்பெரும் பாழியே
(11)
நீரினார் புன்சடை நிமலனுக்கிடமெனப்
பாரினார் பரவ அரதைப்பெரும் பாழியைச்
சீரினார் காழியுள் ஞானசம்பந்தன் செய்
ஏரினார் தமிழ்வல்லார்க்கு இல்லையாம் பாவமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page