(1)
படியுளார் விடையினர், பாய்புலித் தோலினர், பாவநாசர்
பொடிகொள் மாமேனியர், பூதமார் படையினர், பூணநூலர்
கடிகொள் மாமலரிடும் அடியினர், பிடிநடை மங்கையோடும்
அடிகளார் அருள் புரிந்திருப்பிடம் அம்பர் மாகாளம் தானே
(2)
கையில்மா மழுவினர், கடுவிடம் உண்ட வெங்காள கண்டர்
செய்யமா மேனியர், ஊனமர் உடைதலைப் பலிதிரிவார்
வையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும்
ஐயன் மாதேவியோடுடிருப்பிடம் அம்பர் மாகாளம் தானே
(3)
பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர், பரிவிலார்பால்
கரவினர், கனலன உருவினர், படுதலைப் பலிகொடேகும்
இரவினர், பகலெரி கானிடை ஆடிய வேடர், பூணும்
அரவினர், அரிவையோடிருப்பிடம் அம்பர் மாகாளம் தானே
(4)
நீற்றினர், நீண்டவார் சடையினர், படையினர், நிமலர், வெள்ளை
ஏற்றினர், எரிபுரி கரத்தினர், புரத்துளார் உயிரை வவ்வும்
கூற்றினர், கொடியிடை முனிவுற நனிவரும் குலவுகங்கை
ஆற்றினர், அரிவையோடிருப்பிடம் அம்பர் மாகாளம் தானே
(5)
புறத்தினர், அகத்துளர், போற்றி நின்றழுதெழும் அன்பர்சிந்தைத்
திறத்தினர், அறிவிலாச் செதுமதித் தக்கன்தன் வேள்விசெற்ற
மறத்தினர், மாதவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள்புரிந்த
அறத்தினர், அரிவையோடிருப்பிடம் அம்பர் மாகாளம் தானே
(6)
பழக மாமலர் பறித்து இண்டை கொண்டிறைஞ்சுவார் பால்செறிந்த
குழகனார், குணம் புகழ்ந்தேத்துவார் அவர் பலர் கூடநின்ற
கழகனார், கரியுரித்தாடு கங்காளர், நம் காளியேத்தும்
அழகனார், அரிவையோடிருப்பிடம் அம்பர் மாகாளம் தானே
(7)
சங்கவார் குழையினர், தழலன உருவினர், தமதருளே
எங்குமாய் இருந்தவர் அருந்தவ முனிவருக்கு அளித்துகந்தார்
பொங்குமா புனல்பரந்து அரிசிலின் வடகரை திருத்தம்பேணி
அங்கமாறு ஓதுவார் இருப்பிடம் அம்பர் மாகாளம் தானே
(8)
பொருசிலை மதனனைப் பொடிபட விழித்தவர், பொழில்இலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழுற அடர்த்தவர், கோயில் கூறில்
பெருசிலை நலமணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும்
அரிசிலின் வடகரை அழகமர் அம்பர் மாகாளம் தானே
(9)
வரியரா அதன்மிசைத் துயின்றவன் தானும், மாமலர் உளானும்
எரியரா அணி கழலேத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும்
பிரியராம் அடியவர்க்கணியராய்ப் பணிவிலாதவருக்கென்றும்
அரியராய், அரிவையோடிருப்பிடம் அம்பர் மாகாளம் தானே
(10)
சாக்கியக் கயவர், வன் தலைபறிக்கையரும் பொய்யினால்நூல்
ஆக்கிய மொழியவை பிழையவை, ஆதலில் வழிபடுவீர்
வீக்கிய அரவுடைக் கச்சையான் இச்சையானவர்கட்கெல்லாம்
ஆக்கிய அரனுறை அம்பர் மாகாளமே அடைமினீரே
(11)
செம்பொன் மாமணி கொழித்தெழு, திரை வருபுனல் அரிசில்சூழ்ந்த
அம்பர் மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த கோனைக்
கம்பினார் நெடுமதில் காழியுண் ஞானசம்பந்தன் சொன்ன
நம்பிநாள் மொழிபவர்க்கில்லையாம் வினை, நலம் பெறுவர் தாமே!
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...