(1)
புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப் போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் பிணையல் செய்தவர் மேய
மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
அல்லு நண்பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே
(2)
அரவம் ஆட்டுவர், அந்துகில் புலியதள் அங்கையில் அனலேந்தி
இரவும் ஆடுவர், இவையிவர் சரிதைகள் இசைவன பலபூதம்
மரவந்தோய் பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
பரவியும் பணிந்தேத்த வல்லாரவர் பயன் தலைப்படுவாரே
(3)
குணங்கள் கூறியும், குற்றங்கள் பரவியும், குரைகழல் அடிசேரக்
கணங்கள் பாடவும், கண்டவர் பரவவும், கருத்தறிந்தவர் மேய
மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
வணங்கும் உள்ளமோடணைய வல்லார்களை வல்வினை அடையாவே
(4)
எங்கும் ஓதுமோர் பிணியிலர், கேடிலர், இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாமகிழ்ந்தவர் மேய
மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை உடையாரே
(5)
நெதியம் என்னுள, போக மற்றுஎன்னுள, நிலமிசை நலமாய
கதியம் என்னுள, வானவர் என்னுளர், கருதிய பொருள்கூடில்
மதியம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையும் கொண்டேத்துதல் புரிந்தோர்க்கே
(6)
கண்ணுலாவிய கதிரொளி முடிமிசைக் கனல்விடு சுடர்நாகம்
தெண்ணிலாவொடு திலதமும் நகுதலை திகழ வைத்தவர் மேய
மண்ணுலாம் பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
உண்ணிலா நினைப்புடையவர் இயாவர் இவ்வுலகினில் உயர்வாரே
(7)
தூசு தானரைத் தோலுடைக் கண்ணியம் சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவதன்றியும் புகழ் புரிந்தவர் மேய
மாசுலாம் பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
பேசு நீர்மையர் இயாவர் இவ்வுலகினில் பெருமையைப் பெறுவாரே
(8)
பவ்வமார் கடல் இலங்கையர் கோன் தனைப் பருவரைக் கீழூன்றி
எவ்வம் தீர அன்றிமையவர்க்கருள் செய்த இறையவன் உறைகோயில்
மவ்வம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
கவ்வையால் தொழும் அடியவர் மேல்வினை கனலிடைச் செதிளன்றே
(9)
உய்யும் காரணம் உண்டென்று கருதுமின், ஒளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும் பரவநின்றவர் மேய
மையுலாம் பொழில் அரிசில் வடகரை வருபுனல் மாகாளம்
கையினால் தொழுது அவலமும் பிணியும்தம் கவலையும் களைவாரே
(10)
பிண்டி பாலரும், மண்டைகொள் தேரரும், பீலி கொண்டுழல்வாரும்
கண்ட நூலரும் கடுந்தொழிலாளாரும் கழல்நின்றவர் மேய
வண்டுலாம் பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
பண்டு நாம்செய்த பாவங்கள் பற்றறப் பரவுதல் செய்வோமே
(11)
மாறு தன்னொடு மண்மிசை இல்லது வருபுனல் மாகாளத்து
ஈறும் ஆதியுமாகிய சோதியை, ஏறமர் பெருமானை
நாறு பூம்பொழில் காழியுண் ஞானசம்பந்தன தமிழ்மாலை
கூறுவாரையும் கேட்கவல்லாரையும் குற்றங்கள் குறுகாவே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...