(1)
அடையார் புரமூன்றும் அனல்வாய் விழவெய்து
மடையார் புனல் அம்பர் மாகாளம் மேய
விடையார் கொடிஎந்தை வெள்ளைப் பிறைசூடும்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே
(2)
தேனார் மதமத்தம் திங்கள் புனல்சூடி
வானார் பொழில் அம்பர் மாகாளம் மேய
ஊனார் தலைதன்னில் பலிகொண்டுழல் வாழ்க்கை
ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே
(3)
திரையார் புனலோடு செல்வ மதிசூடி
விரையார் பொழில் அம்பர் மாகாளம் மேய
நரையார் விடையூரும் நம்பான் கழல்நாளும்
உரையாதவர் கண்மேல் ஒழியா ஊனம்மே
(4)
கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலி அம்பர் மாகாளம் மேய
கந்தம் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த
எந்தை கழலேத்த இடர் வந்தடையாவே
(5)
அணியார் மலைமங்கை ஆகம் பாகமாய்
மணியார் புனல் அம்பர் மாகாளம் மேய
துணியார் உடையினான் துதைபொற் கழல்நாளும்
பணியாதவர் தம்மேல் பறையா பாவம்மே
(6)
பண்டாழ் கடல் நஞ்சையுண்டு களிமாந்தி
வண்டார் பொழில் அம்பர் மாகாளம் மேய
விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே
(7)
மிளிரும் அரவோடு வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழில் அம்பர் மாகாளம் மேய
கிளரும் சடை அண்ணல் கேடில் கழலேத்தத்
தளரும் உறுநோய்கள் சாரும் தவம் தானே
(8)
கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலையார் புனல் அம்பர் மாகாளம் மேய
இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே
(9)
சிறையார் வரிவண்டு தேனுண்டு இசைபாட
மறையார் நிறை அம்பர் மாகாளம் மேய
நறையார் மலரானும் மாலும் காண்பொண்ணா
இறையான் கழலேத்த எய்தும் இன்பம்மே
(10)
மாசூர் வடிவின்னார், மண்டைஉணல் கொள்வார்
கூசாதுரைக்கும் சொல் கொள்கை குணமல்ல
வாசார் பொழில் அம்பர் மாகாளம் மேய
ஈசா என்பார்கட்கில்லை இடர்தானே
(11)
வெரிநீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள்
திருமா மறைஞான சம்பந்தன் சேணார்
பெருமான் மலி அம்பர் மாகாளம் பேணி
உருகா உரைசெய்வார் உயர்வான் அடைவாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...