(1)
கணைநீடெரி மாலரவம் வரைவில்லா
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணைமா மயிலும் குயில்சேர் மடஅன்னம்
அணையும் பொழில் அன்பிலாலந்துறையாரே
(2)
சடையார்; சதுரன்; முதிரா மதிசூடி
விடையார் கொடி ஒன்றுடை எந்தை; விமலன்
கிடையார் ஒலியோத்து அரவத்திசை கிள்ளை
அடையார் பொழில் அன்பிலாலந்துறையாரே
(3)
ஊரும் அரவம் சடைமேலுற வைத்துப்
பாரும் பலிகொண்டு ஒலிபாடும் பரமர்
நீருண் கயலும் வயல்வாளை வராலோடு
ஆரும் புனல் அன்பிலாலந்துறையாரே
(4)
பிறையும் அரவும் உறவைத்த முடிமேல்
நறை உண்டெழு வன்னியும் மன்னு சடையார்
மறையும் பல வேதியர் ஓத ஒலிசென்று
அறையும் புனல் அன்பிலாலந்துறையாரே
(5)
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்
கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார்
மாடும் முழவம் அதிர மடமாதர்
ஆடும் பதி அன்பிலாலந்துறையாரே
(6)
நீறார் திருமேனியர், ஊனமிலார் பால்
ஊறார் சுவையாகிய உம்பர் பெருமான்
வேறார் அகிலும் மிகுசந்தனம் உந்தி
ஆறார் வயல் அன்பிலாலந்துறையாரே
(7)
செடியார் தலையில் பலிகொண்டு இனிதுண்ட
படியார் பரமன் பரமேட்டி தன்சீரைக்
கடியார் மலரும் புனல்தூவி நின்றேத்தும்
அடியார் தொழும் அன்பிலாலந்துறையாரே
(8)
விடத்தார் திகழும் மிடறன், நடமாடி
படத்தார் அரவம் விரவும் சடைஆதி
கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரையார
அடர்த்தார் அருள் அன்பிலாலந்துறையாரே
(9)
வணங்கிம் மலர்மேல் அயனும் நெடுமாலும்
பிணங்கி அறிகின்றிலர் மற்றும் பெருமை
சுணங்கும் முகத்தம் முலையாள் ஒருபாகம்
அணங்கும் நிகழ் அன்பிலாலந்துறையாரே
(10)
தறியார் துகில் போர்த்துழல்வார் சமண்கையர்
நெறியா உணரா நிலைக் கேடினர் நித்தல்
வெறியார் மலர்கொண்டு அடிவீழும் அவரை
அறிவார் அவர் அன்பிலாலந்துறையாரே
(11)
அரவார் புனல் அன்பிலாலந்துறை தன்மேல்
கரவாதவர் காழியுண் ஞானசம்பந்தன்
பரவார் தமிழ்பத்திசை பாடவல்லார் போய்
விரவாகுவர் வானிடை வீடெளிதாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...