அன்பில்ஆலந்துறை – அப்பர் தேவாரம்:

<– அன்பில்ஆலந்துறை

(1)
வானம் சேர் மதிசூடிய மைந்தனை
நீநெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை
ஆனஞ்சாடியை அன்பிலாலந்துறைக்
கோன் எம்செல்வனைக் கூறிடகிற்றியே
(2)
காரணத்தர் கருத்தர் கபாலியார்
வாரணத்துரி போர்த்த மணாளனார்
ஆரணப் பொருள் அன்பிலாலந்துறை
நாரணற்கரியான் ஒரு நம்பியே
(3)
அன்பின் ஆனஞ்சு அமைந்து உடனாடிய
என்பின் ஆனை உரித்துக் களைந்தவன்
அன்பிலானையம் மானை அள்ளூறிய
அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே
(4)
சங்கை உள்ளதும் சாவது மெய், உமை
பங்கனார் அடி பாவியேன் நானுய்ய
அங்கணன் எந்தை அன்பிலாலந்துறைச்
செங்கணார் அடிச் சேரவும் வல்லனே
(5)
கொக்கிறகர்; குளிர்மதிச் சென்னியர்
மிக்கரக்கர் புரமெரி செய்தவர்
அக்கரையினர்; அன்பிலாலந்துறை
நக்குருவரும் நம்மை அறிவரே
(6)
வெள்ளமுள்ள விரிசடை நந்தியைக்
கள்ளமுள்ள மனத்தவர் காண்கிலார்
அள்ளலார் வயல் அன்பிலாலந்துறை
உள்ளவாறறியார் சிலர் ஊமரே
(7)
பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும்
உறவெலாம் சிந்தித்துன்னி உகவாதே
அறவன் எம்பிரான் அன்பிலாலந்துறை
மறவாதே தொழுதேத்தி வணங்குமே
(8)
நுணங்கு நூலயன் மாலும் இருவரும்
பிணங்கி எங்கும் திரிந்தெய்த்தும் காண்கிலா
அணங்கன் எம்பிரான் அன்பிலாலந்துறை
வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே
(9)
பொய்யெலாம் உரைக்கும் சமண் சாக்கியக்
கையன்மார் உரை கேளாது எழுமினோ
ஐயன் எம்பிரான் அன்பிலாலந்துறை
மெய்யன் சேவடி ஏத்துவார் மெய்யரே
(10)
இலங்கை வேந்தன் இருபது தோளிற்று
மலங்க மாமலை மேல் விரல் வைத்தவன்
அலங்கல் எம்பிரான் அன்பிலாலந்துறை
வலங்கொள்வாரை வானோர் வலம் கொள்வரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page