வேத மொழியர், வெண்ணீற்றர், செம்மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர்இந் நாதனார் அன்னே என்னும்
(2)
கண்அஞ்சனத்தர், கருணைக் கடலினர்
உண்ணின்றுருக்குவர் அன்னே என்னும்
உண்ணின்றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும்
(3)
நித்த மணாளர், நிரம்ப அழகியர்
சித்தத்திருப்பரால் அன்னே என்னும்
சித்தத்திருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்
(4)
ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்
வேடம் இருந்தவாறன்னே என்னும்
வேடம் இருந்தவா கண்டு கண்டென் உள்ளம்
வாடும் இதுஎன்னே அன்னே என்னும்
(5)
நீண்ட கரத்தர், நெறிதரு குஞ்சியர்
பாண்டி நன்னாடரால் அன்னே என்னும்
பாண்டி நன்னாடர் பரந்தெழு சிந்தையை
ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும்
(6)
உன்னற்கரிய சீர் உத்தர மங்கையர்
மன்னுவதென் நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவதென் நெஞ்சில் மாலயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும்
(7)
வெள்ளைக் கலிங்கத்தர், வெண்திரு முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்
(8)
தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்
ஆள்எம்மை ஆள்வரால் அன்னே என்னும்
ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில்
தாளம் இருந்தவாறன்னே என்னும்
(9)
தையலோர் பங்கினர் தாபத வேடத்தர்
ஐயம் புகுவரால் அன்னே என்னும்
ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம்
நையும்இது என்னே அன்னே என்னும்
(10)
கொன்றை மதியமுங் கூவிள மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக்கானவா(று) அன்னே என்னும்
