அனேகதங்காவதம்:

<– வட நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
நீடல் மேவு நிமிர்புன்சடை மேலொர் நிலாமுளை
சூடல், மேவு மறையின் முறையால்ஓர் சுலாவழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம்
பாடல் மேவு மனத்தார் வினை பற்றறுப்பார்களே
(2)
சூலமுண்டு மழுவுண்டு அவர் தொல்படை, சூழ்கடல்
ஆலமுண்ட பெருமான்தன் அனேகதங்காவதம்
நீலமுண்ட தடங்கண் உமைபாக நிலாயதோர்
கோலமுண்ட அளவில்லை குலாவிய கொள்கையே
(3)
செம்பினாரும் மதில் மூன்றெரியச் சினவாயதோர்
அம்பினால் எய்தருள் வில்லி, அனேகதங் காவதம்
கொம்பினேர் இடையாளொடும் கூடிக் கொல்லேறுடை
நம்பன் நாமம் நவிலாதன நா எனலாகுமே
(4)
தந்தத் திந்தத் தடமென்றருவித்திரள் பாய்ந்துபோய்ச்
சிந்த, வெந்த கதிரோனொடு மாசறு திங்களார்
அந்தமில்ல அளவில்ல அனேகதங்காவதம்
எந்தை வெந்தபொடி நீறணிவார்க்கிடமாவதே
(5)
பிறையும் மாசில் கதிரோன் அறியாமைப் பெயர்ந்துபோய்
உறையும் கோயில், பசும்பொன் அணியார் அசும்பார் புனல்
அறையும்ஓசை பறைபோலும் அனேகதங்காவதம்
இறைஎம் ஈசன் எம்மான் இடமாக உகந்ததே
(6)
தேனையேறு நறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர்
ஆனையேறும் அணி சாரல் அனேகதங்காவதம்
வானையேறு நெறி சென்றுணருந்தனை வல்லிரேல்
ஆன்ஐஏறு முடியான் அருள் செய்வதும் வானையே
(7)
வெருவி வேழம் இரியக்கதிர் முத்தொடு வெண்பளிங்கு
உருவி வீழ வயிரம் கொழியா அகிலுந்தி வெள்
அருவி பாயுமணி சாரல் அனேகதங்காவதம்
மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே
(8)
ஈரமேதும் இலனாகி எழுந்த இராவணன்
வீரமேதும் இலனாக விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்பதணிவான் தன் அனேகதங்காவதம்
வாரமாகி நினைவார் வினையாயின மாயுமே
(9)
கண்ணன், வண்ண மலரானொடும் கூடியோர்க்கையமாய்
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்ததோர் ஆரழல்
அண்ணல் நண்ணும் அணிசாரல் அனேகதங்காவதம்
நண்ணும் வண்ணமுடையார் வினையாயின நாசமே
(10)
மாபதம் அறியாதவர், சாவகர், சாக்கியர்
ஏபதம் பட நின்று இறுமாந்துழல்வார்கள் தாம்
ஆபதம் அறிவீர் உளிராகில் !அனேகதங்
காபதம் அமர்ந்தான் கழல் சேர்தல் கருமமே
(11)
தொல்லையூழிப் பெயர் தோன்றிய தோணிபுரத்திறை
நல்லகேள்வித் தமிழ் ஞானசம்பந்தன், நல்லார் கண்முன்
அல்லல்தீர உரை செய்த அனேகதங்காவதம்
சொல்ல நல்லஅடையும் அடையா சுடுதுன்பமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page