போற்றித் திருஅகவல்

<– திருவாசகம்

நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடியாலே மூவுலகளந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று
அடிமுடியறியும் ஆதரவதனிற்

கடுமுரண் ஏனமாகி முன்கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின்எய்த்து
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியுங் காணா மலரடியிணைகள்
வழுத்துதற்கெளிதாய் வார்கடல் உலகினில்

யானை முதலா எறும்பீறாய
ஊனமில் யோனியினுள் வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்(து)
ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
ஒருமதித்தான்றியின் இருமையிற் பிழைத்தும்

இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும்

ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்

ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகற் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்

ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக்
கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்து
எய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தங்
கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்

பித்தவுலகர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வியென்னும் பல்கடற் பிழைத்தும்
செல்வமென்னும் அல்லலிற் பிழைத்தும்
நல்குரவென்னுந் தொல்விடம் பிழைத்தும்

புல்வரம்பாய பலதுறைப் பிழைத்தும்
தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி
முனிவிலாததோர் பொருளது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின

ஆத்தமானார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர்
சுற்றமென்னுந் தொல்பசுக் குழாங்கள்
பற்றியழைத்துப் பதறினர் பெருகவும்
விரதமே பரமாக வேதியரும்

சரதமாகவே சாத்திரங் காட்டினர்
சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவதாக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதமென்னும்
சண்ட மாருதஞ் சுழித்தடித்தார்த்து

உலோகாயதன்எனும் ஒண்திறல் பாம்பின்
கலா பேதத்த கடுவிடமெய்தி
அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும்
தப்பாமே தாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகது போலத்

தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்
தாடியும் அலறியும் பாடியும் பரவியுங்
கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும்
படியேயாகி நல்இடையறா அன்பிற்
பசுமரத்தாணி அறைந்தாற் போலக்

கசிவது பெருகிக் கடலென மறுகி
அகங் குழைந்தனுகுலமாய் மெய் விதிர்த்துச்
சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணதுவாகக் கோணுதலின்றிச்

சதுரிழந்தறிமால் கொண்டு சாரும்
கதியது பரமா அதிசயமாகக்
கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா
தருபரத்தொருவன் அவனியில் வந்து

குருபரனாகி அருளிய பெருமையைச்
சிறுமை என்றிகழாதே திருவடி இணையைப்
பிறிவினை அறியா நிழலது போல
முன்பின்னாகி முனியாதத்திசை
என்பு நைந்துருகி நெக்கு நெக்கேங்கி

அன்பெனும் ஆறு கரையது புரள
நன்புலன் ஒன்றி நாத என்றரற்றி
உரைதடுமாறி உரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித்திருதயம் மலரக்
கண்களி கூர நுண்துளி அரும்பச்

சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயேயாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதியனாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி

கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்காரமுதானாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி

மின்னார் உருவ விகிர்தா போற்றி
கல்நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆவா என்றனக்கருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி

இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவ போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரைசேர் சரண விகிர்தா போற்றி

வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி

கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி

வானோர்க்கரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கெளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரையுணர்விறந்த ஒருவ போற்றி
விரிகடல் உலகின் விளைவே போற்றி

அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகிலாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி

தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்தவாரி போற்றி
அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மானோர் நோக்கி மணாளா போற்றி

வானகத்தமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளத்தமுதே போற்றி
கனவிலுந் தேவர்க்கரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கருளினை போற்றி
இடைமருதுறையும் எந்தாய் போற்றி

சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
அண்ணாமலைஎம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுருவானாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்றோர் பற்றிங்கறியேன் போற்றி

குற்றாலத்தெங் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
பாங்கார் பழனத்தழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி

அடைந்தவர்க்கருளும் அப்பா போற்றி
இத்திதன்னின் கீழிரு !மூவர்க்
கத்திக்கருளிய அரசே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஏனக் குருளைக்கருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி

களங்கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சேல் என்றிங்கருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி

பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி

உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி

இலங்கு சுடரெம் ஈசா போற்றி
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலைநாடுடைய மன்னே போற்றி
கலையார் அரிகேசரியாய் போற்றி

திருக்கழுக்குன்றிற் செல்வா போற்றி
பொருப்பமர் பூவணத்தரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி

தெரிவரிதாகிய தெளிவே போற்றி
தோளா முத்தச் சுடரே போற்றி
ஆளானவர்கட்கன்பா போற்றி
ஆரா அமுதே அருளே போற்றி
பேராயிரமுடைப் பெம்மான் போற்றி

தாளி அறுகின் தாராய் போற்றி
நீளொளியாகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக்கரிய சிவமே போற்றி
மந்தர மாமலை மேயாய் போற்றி

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல்வாய்க்கருளினை போற்றி
அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
கருங் குருவிக்கன்றருளினை போற்றி
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி

படியுறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடுவீறானாய் போற்றி
நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற்
பரகதி பாண்டியற்கருளினை போற்றி
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி

செழுமலர்ச் சிவபுரத்தரசே போற்றி
கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பொன்றறியா நாயேன்
குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி

புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றிபோற்றி புராண காரண
போற்ற போற்றி சயசய போற்றி

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page