பண்டாய நான்மறை

<– திருவாசகம்

(1)
பண்டாய நான்மறையும் பாலணுகா, மாலயனுங்
கண்டாருமில்லைக், கடையேனைத் தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மாறுரை

(2)
உள்ள மலமூன்றும் மாய, உகுபெருந்தேன்
வெள்ளந் தரும் – பரியின் மேல்வந்த வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள், வாழ்த்தக்
கருவுங் கெடும் பிறவிக்காடு

(3)
காட்டகத்து வேடன், கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிபாகன், நம்வினையை வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங்கெட நெஞ்சே வாழ்த்து

(4)
வாழ்ந்தார்கள் ஆவாரும், வல்வினையை மாய்ப்பாருந்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ், சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர்

(5)
நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணிஎழு, கோகழிக்கரசைப் – பண்ணின்
மொழியாளோ(டு) உத்தரகோசமங்கை மன்னிக்
கழியாதிருந்தவனைக் காண்

(6)
காணுங் கரணங்கள் எல்லாம் பேரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக், காணும்
பெரியானை – நெஞ்சே – பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு

(7)
பேசும் பொருளுக்கிலக்கிதமாம் – பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை, பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் – நல்ல
மருந்தின்அடி என்மனத்தே வைத்து

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page