திருமறைக்காடு – அப்பர் தேவாரம் (2):

<– திருமறைக்காடு

(1)
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற
சுந்தரமானார் போலும், துதிக்கலாம் சோதி போலும்
சந்திரனோடு கங்கை அரவையும் சடையுள் வைத்து
மந்திரமானார் போலும் மாமறைக் காடனாரே
(2)
தேயன நாடராகித் தேவர்கள் தேவர் போலும்
பாயன நாடறுக்கும் பத்தர்கள் பணிய வம்மின்
காயன நாடு கண்டம் கதனுளார், காள கண்டர்
மாயன நாடர் போலும் மாமறைக் காடனாரே
(3)
அறுமை இவ்வுலகு தன்னை ஆமெனக் கருதி நின்று
வெறுமையில் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே
சிறுமதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து
மறுமையும் இம்மையாவார் மாமறைக் காடனாரே
(4)
கால் கொடுத்திருகை ஏற்றிக் கழிநிரைத்திறைச்சி மேய்ந்து
தோல் படுத்துதிர நீரால் சுவரெடுத்திரண்டு வாசல்
ஏல்உடைத்தா அமைத்தங்கேழு சாலேகம் பண்ணி
மால்கொடுத்தாவி வைத்தார் மாமறைக் காடனாரே
(5)
விண்ணினார் விண்ணின் மிக்கார், வேதங்கள் விரும்பியோதப்
பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடியாடக்
கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை
மண்ணினார் வலம்கொண்டேத்து மாமறைக் காடனாரே
(6)
அங்கையுள் அனலும் வைத்தார், அறுவகைச் சமயம் வைத்தார்
தங்கையில் வீணை வைத்தார், தம்அடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கையோடு திகழ்தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காடனாரே
(7)
கீதராய்க் கீதம் கேட்டுக் கின்னரம் தன்னை வைத்தார்
வேதராய் வேதமோதி, விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய் நட்டமாடி, இட்டமாய்க் கங்கையோடு
மாதையோர் பாகம் வைத்தார் மாமறைக் காடனாரே
(8)
கனத்தினார் வலியுடைய கடிமதில் அரணம் மூன்றும்
சினத்தினுள் சினமாய் நின்று தீயெழச் செற்றார் போலும்
தனத்தினைத் தவிர்ந்துநின்று தம்அடி பரவுவார்க்கு
மனத்தினுள் மாசு தீர்ப்பார் மாமறைக் காடனாரே
(9)
தேசனைத் தேசன் தன்னைத் தேவர்கள் போற்றிசைப்பார்
வாசனை செய்து நின்று வைகலும் வணங்குமின்கள்
காசினைக் கனலை என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு
மாசினைத் தீர்ப்பர் போலும் மாமறைக் காடனாரே
(10)
பிணியுடை யாக்கை தன்னைப் பிறப்பறுத்துய்ய வேண்டில்
பணியுடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே
துணிவுடை அரக்கனோடி எடுத்தலும் தோகையஞ்ச
மணிமுடிப் பத்திறுத்தார் மாமறைக் காடனாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page