திருப்பழுவூர்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
 
(1)
முத்தன்;மிகு மூவிலை நல்வேலன்; விரிநூலன்
அத்தன்; எமை ஆளுடைய அண்ணலிடம் என்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே
(2)
கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்த பெருமானது இடமென்பர்
மாடமலி சூளிகையிலேறி மடவார்கள்
பாடலொலி செய்ய மலிகின்ற பழுவூரே
(3)
வாலிய புரத்தில்அவர் வேவ விழிசெய்த
போலிய ஒருத்தர் புரிநூலர் இடமென்பர்
வேலியின் விரைக்கமலம் அன்னமுக மாதர்
பாலென மிழற்றி நடமாடு பழுவூரே
(4)
எண்ணுமொர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார்
கண்ணும் முதலாய கடவுட்கு இடமதென்பர்
மண்ணின் மிசையாடி மலையாளர் தொழுதேத்திப்
பண்ணினொலி கொண்டு பயில்கின்ற பழுவூரே
(5)
சாதல் புரிவார் சுடலை தன்னில் நடமாடும்
நாதன், நமை ஆளுடைய நம்பன் இடமென்பர்
வேதமொழி சொல்லி மறையாளர் இறைவன் தன்
பாதமவை ஓத நிகழ்கின்ற பழுவூரே
(6)
மேவயரும் மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மாஅயர அன்றுரிசெய் மைந்தன்இடம் என்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே
(7)
மந்தணம் இருந்துபுரி மாமடி தன் வேள்வி
சிந்த விளையாடு சிவலோகன் இடமென்பர்
அந்தணர்கள் ஆகுதியில் இட்டஅகில் மட்டார்
பைந்தொடி நன்மாதர் சுவடொற்று பழுவூரே
(8)
உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்று
அரக்கனை அடர்த்தருளும் அப்பன்இடம் என்பர்
குரக்கினம் விரைப்பொழிலின் மீது கனியுண்டு
பரக்குறு புனல்செய் விளையாடு பழுவூரே
(9)
நின்ற நெடுமாலும், ஒரு நான்முகனும் நேட
அன்று தழலாய் நிமிரும் ஆதி இடம் என்பர்
ஒன்றுமிரு மூன்றுமொரு நாலும்உணர்வார்கள்
மன்றினில் இருந்துடன் மகிழ்ந்த பழுவூரே
(10)
மொட்டை அமணாதர், துகில் மூடுவிரி தேரர்
முட்டை கண்மொழிந்த முனிவான் தனிடம் இன்பர்
மட்டைமலி தாழையிள நீரதிசை பூகம்
பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே
(11)
அந்தணர்களான மலையாளர்அவர் ஏத்தும்
பந்த மலிகின்ற பழுவூரர் அனைஆரச்
சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணி
வந்தவணம் ஏத்துமவர் வானம் உடையாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page