திருப்பள்ளியெழுச்சி

<– திருவாசகம்

(1)
போற்றிஎன் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது, பூங்கழற்கிணை துணை மலர் !கொண்
டேற்றி – நின் திருமுகத்தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய், எனை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

(2)
அருணன் இந்திரன்திசை அணுகினன் – இருள்போய்
அகன்றது – உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ – நயனக்
கடிமலர் மலர, மற்றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே

(3)
கூவின பூங்குயில், கூவின கோழி
குருகுகள் இயம்பின, இயம்பின சங்கம்
ஓவின தாரகையொளி, ஒளி !உதயத்
தொருப்படுகின்றது, விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய், எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

(4)
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டு கொண்டின்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

(5)
பூதங்கள் தோறும் நின்றாய்எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் – எங்கள் முன் !வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

(6)
பப்பற வீட்டிருந்துணரும் நின்அடியார்
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின்
வணங்குகின்றார் – அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

(7)
அதுபழச் சுவையென – அமுதென – !அறிதற்
கரிதென – எளிதென – அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு – இவன்அவன் எனவே
எங்களை ஆண்டு கொண்டிங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தரகோச
மங்கையுள்ளாய் – திருப்பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளுமாறது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

(8)
முந்திய முதல்நடு இறுதியுமானாய்
மூவரும் அறிகிலர் – யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணனாவதுங் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதேபள்ளி எழுந்தருளாயே

(9)
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே உன தொழுப்படியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே
வண் திருப்பெருந்துறையாய் – வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே
கடலமுதே – கரும்பே – விரும்படியார்
எண்ணகத்தாய் – உலகுக்குயிரானாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

(10)
புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே, இந்தப் பூமி
சிவன்உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கித்
திருப்பெருந்துறை உறைவாய் – திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் – மலரவன் ஆசைப்
படவும் – நின்அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page