திருப்படை ஆட்சி

<– திருவாசகம்

(1)
கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகையார்கள் தம் வாழ்வில்என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடுமாறு மறந்திடும் ஆகாதே
மாலறியா மலர்ப்பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொடாடல் பயின்றிடுமாகாதே
பாண்டி நன்னாடுடையான் படையாட்சிகள் பாடுதுமாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படுமாகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே

(2)
ஒன்றினொடொன்றுமோர் ஐந்தினொடைந்தும் உயிர்ப்பறும் ஆகாதே
உன்னடியார் அடியார் அடியோமென உய்ந்தனவாகாதே
கன்றை நினைந்தெழுதாயென வந்த கணக்கதுவாகாதே
காரணமாகும் அனாதி குணங்கள் கருத்துறுமாகாதே
நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே
நாமுமெலாம் அடியாருடனே செல நண்ணுதுமாகாதே
என்றுமென் அன்பு நிறைந்த பராவமுதெய்துவதாகாதே
ஏறுடையான் எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே

(3)
பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடுமாகாதே
பாவனையாய கருத்தினில் வந்த பராவமுதாகாதே
அந்தமிலாத அகண்டமும் நம்முள் அகப்படுமாகாதே
ஆதிமுதற் பரமாய பரஞ்சுடர் அண்ணுவதாகாதே
செந்துவர் வாய்மடவார் இடரானவை சிந்திடுமாகாதே
சேலன கண்கள் அவன் திருமேனி திளைப்பன ஆகாதே
இந்திர ஞால இடர்ப் பிறவித்துயர் ஏகுவதாகாதே
என்னுடை நாயகனாகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே

(4)
என்னணியார் முலைஆகம் அளைந்துடன் இன்புறுமாகாதே
எல்லையில் மாக் கருணைக்கடல் இன்றினிதாடுதும் ஆகாதே
நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவதாகாதே
நாதன்அணித் திருநீற்றினை நித்தலும் நண்ணுவதாகாதே
மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவதாகாதே
மாமறையும் அறியா மலர்ப்பாதம் வணங்குதுமாகாதே
இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவதாகாதே
என்னையுடைப் பெருமான் அருள்ஈசன் எழுந்தருளப்பெறிலே

(5)
மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறுமாகாதே
வானவரும் அறியா மலர்ப்பாதம் வணங்குதுமாகாதே
கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறுமாகாதே
காதல்செயும் அடியார்மனம் இன்று களித்திடுமாகாதே
பெண்ணலி ஆணென நாமென வந்த பிணக்கறுமாகாதே
பேரறியாத அநேக பவங்கள் பிழைத்தன ஆகாதே
எண்ணிலியாகிய சித்திகள் வந்தெனை எய்துவதாகாதே
என்னையுடைப் பெருமான் அருள்ஈசன் எழுந்தருளப் பெறிலே

(6)
பொன்னியலுந் திருமேனி வெண்ணீறு பொலிந்திடுமாகாதே
பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடுமாகாதே
மின்னியல் நுண்ணிடையார்கள் கருத்து வெளிப்படுமாகாதே
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடுமாகாதே
தன்னடியார் அடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
தானடியோம் உடனேஉய வந்து தலைப்படுமாகாதே
இன்னியம் எங்கும் நிறைந்தினிதாக இயம்பிடுமாகாதே
என்னைமுன் ஆளுடை ஈசன் என்அத்தன் எழுந்தருளப் பெறிலே

(7)
சொல்லியலாதெழு தூமணியோசை சுவை தருமாகாதே
துண்ணென என்னுளம் மன்னிய சோதி தொடர்ந்தெழுமாகாதே
பல்லியல் பாய பரப்பற வந்த பராபரமாகாதே
பண்டறியாத பராநுபவங்கள் பரந்தெழுமாகாதே
வில்லியல் நன்னுதலார் மயல்இன்று விளைந்திடுமாகாதே
விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொருளாகாதே
எல்லையிலாதன எண்குணமானவை எய்திடுமாகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தருளப் பெறிலே

(8)
சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடுமாகாதே
அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடுமாகாதே
ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் அத்தனையாகாதே
செங்கயல் ஒண்கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
சீரடியார்கள் சிவாநுபவங்கள் தெரிந்திடுமாகாதே
எங்கும் நிறைந்தமுதூறு பரஞ்சுடர் எய்துவதாகாதே
ஈறறியா மறையோன் எனைஆள எழுந்தருளப் பெறிலே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page