(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
மறையுடையாய், தோல்உடையாய், வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய், பிஞ்ஞகனே என்றுனைப் பேசின் அல்லால்
குறையுடையார் குற்றம்ஓராய், கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
(2)
கனைத்தெழுந்த வெண்திரை சூழ்கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்தகத்தோர் பாடல்ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
(3)
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடற்கூற்றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
(4)
மலைபுரிந்த மன்னவன் தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவ நின்தாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே
(5)
பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின்தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
(6)
விருத்தனாகிப் பாலனாகி வேதம்ஓர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேல் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர்கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
(7)
கூறுகொண்டாய், மூன்றும் ஒன்றாக்கூட்டி ஓர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே, கொடிமேல்
ஏறுகொண்டாய், சாந்தம் ஈதென்று எம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
(8)
குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடிமதில்சூழ் இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்றுநைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
(9)
வேழ வெண்கொம்பொசித்த மாலும், விளங்கிய நான்முகனும்
சூழஎங்கும் நேட ஆங்கோர் சோதியுளாகி நின்றாய்
கேழல் வெண்கொம்பணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல்வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
(10)
வெஞ்சொல் தம்சொல் ஆக்கி நின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
(11)
நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர்வாழும் மாமறுகில் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...