திருத்தோணோக்கம்

<– திருவாசகம்

(1)
பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும் பேதைகுணம் ஆகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி கூடும்வண்ணம் தோணோக்கம்

(2)
என்றும் பிறந்திறந்தாழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவெறிந்தான் – பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை அம்பலவன் குணம்பரவித்
துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ

(3)
பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச்
செருப்புற்ற சீரடி – வாய்க் கலசம்- ஊன்அமுதம்
விருப்புற்று வேடனார் சேடறிய !மெய்குளிர்ந்தங்
கருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ

(4)
கற்போலும் நெஞ்சங் கசிந்துருகக் கருணையினால்
நிற்பானைப் போலஎன் நெஞ்சினுள்ளே புகுந்தருளி
நற்பாற் படுத்தென்னை நாடறியத் தான்இங்ஙன்
சொற்பாலதானவா தோணோக்கம் ஆடாமோ

(5)
நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோடெண் வகையாய்ப் புணர்ந்து நின்றான்
உலகேழ்எனத் – திசைபத்தெனத் – தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ

(6)
புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்
தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்
அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடாமோ

(7)
தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப, ஈசன் திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்

(8)
மானம் அழிந்தோம், மதிமறந்தோம், மங்கைநல்லீர்
வானந் தொழுந் தென்னன் வார்கழலே நினைந்தடியோம்
ஆனந்தக் கூத்தன் அருள்பெறில்நாம் அவ்வணமே
ஆனந்தமாகி நின்றாடாமோ தோணோக்கம்

(9)
எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக்
கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின்
எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் தோணோக்கம்

(10)
பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்
தங்கண் இடந்(து)அரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்கருளியவாறு
எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ

(11)
காமன் உடல் – உயிர் காலன் – பல் காய்கதிரோன்
நாமகள் நாசி – சிரம் பிரமன் – கரம்எரியைச்
சோமன் கலை – தலை தக்கனையும் எச்சனையும்
தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ

(12)
பிரமன்அரி என்றிருவருந் தம் பேதைமையால்
பரமம் யாம் பரம் என்றவர்கள் பதைப்பொடுங்க
அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ

(13)
ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே
ஊழிமுதற் சிந்தாத நன்மணி வந்தென் பிறவித்
தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ

(14)
உரைமாண்ட உள்ளொளி உத்தமன் வந்துளம் புகலும்
கரைமாண்ட காமப் பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்
துரைமாண்டவா பாடித் தோணோக்கம் ஆடாமோ

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page