திருச்செங்காட்டங்குடி – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருச்செங்காட்டங்குடி

(1)
பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள், பயப்பூரச்
சங்காட்டம் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே
(2)
பொன்னம்பூங் கழிக்கானல் புணர் துணையோடுடன் வாழும்
அன்னங்காள் அன்றில்காள், அகன்றும் போய் வருவீர்காள்
கன்னவிதோள் சிறுத்தொண்டன் கணபதீச்சர மேய
இன்னமுதன் இணையடிக்கீழ் எனதல்லல் உரையீரே
(3)
குட்டத்தும் குழிக்கரையும், குளிர்பொய்கைத் தடத்தகத்தும்
இட்டத்தால் இரைதேரும் இருஞ்சிறகின் மடநாராய்
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
வட்டவார் சடையார்க்கென் வருத்தம் சென்றுரையாயே
(4)
கானருகும் வயலருகும் கழியருகும் கடலருகும்
மீனிரிய வருபுனலில் இரைதேர் வெண்மடநாராய்
தேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
வானமரும் சடையார்க்கென் வருத்தம் சென்றுரையாயே
(5)
ஆரலாம் சுறவமேய்ந்து அகன்கழனிச் சிறகுலர்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே பயில்தூவி மடநாராய்
சீருலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
நீருலாம் சடையார்க்கென் நிலைமை சென்றுரையீரே
(6)
குறைக்கொண்டார் இடர்தீர்த்தல் கடனன்றே, குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய்
கறைக்கண்டன் பிறைச்சென்னிக் கணபதீச்சர மேய
சிறுத்தொண்டன் பெருமான் சீரருள் ஒருநாள் பெறலாமே
(7)
கருவடிய பசுங்கால் வெண்குருகே, ஒண் கழிநாராய்
ஒருஅடியாள் இரந்தாள் என்றொரு நாள் சென்றுரையீரே
செருவடிதோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
திருவடிதன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே
(8)
கூராரல் இரைதேர்ந்து குளமுலவி வயல்வாழும்
தாராவே மடநாராய் தமியேற்கொன்றுரையீரே
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பேராளன் பெருமான்தன் அருளொருநாள் பெறலாமே
(9)
நறப்பொலிபூங் கழிக்கானல் நவில்குருகே உலகெல்லாம்
அறப்பலி தேர்ந்துழல்வார்க்கென் அலர்கோடல் அழகியதே
சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின்று இழக்கோஎம் பெருநலமே
(10)
(11)
செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங்குடி மேய
வெந்தநீறணி மார்பன் சிறுத்தொண்டனவன் வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி அடிகளையே அடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page