பூசுவதும் வெண்ணீறு, பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ
(2)
என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தான் ஈசன்
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ
மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ
(3)
கோயில் சுடுகாடு, கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ
(4)
அயனை அநங்கனை அந்தகனைச் சந்திரனை
வயனங்கண் மாயா வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ
(5)
தக்கனையும் எச்சனையுந் தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கன வந்தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ
தொக்கன வந்தவர்தம்மைத் தொலைத்தருளி அருள் !கொடுத்தங்
கெச்சனுக்கு மிகைத்தலை மற்றருளினன் காண் சாழலோ
(6)
அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந் தம்
சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ
(7)
மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ
(8)
கோலாலமாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன்சதுர் தான் என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ
(9)
தென்பால் உகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பால் உகந்திலனேற் பேதாய் – இருநிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ
(10)
தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத்தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ
(11)
நங்காய் இதென்ன தவம் நரம்போடெலும்பணிந்து
கங்காளம் தோள்மேலே காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள் காலாந்தரத்திருவர்
தங்காலஞ் செய்யத் தரித்தனன் காண் சாழலோ
(12)
கானார் புலித்தோல் உடை – தலை ஊண் – காடு பதி
ஆனால் அவனுக்கிங்காட்படுவார் ஆரேடீ
ஆனாலுங் கேளாய் அயனுந் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ
(13)
மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளாதொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங் காண் சாழலோ
(14)
தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச் சிற்றம்பலவன்
தான் புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்கவேற் காளிக்(கு) ஊட்டாங் காண் சாழலோ
(15)
கடகரியும் பரிமாவும் தேரும் உகந்தேறாதே
இடபம் உகந்தேறியவாறெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ
(16)
நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங்கறம் உரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங்கறம் உரைத்தான் ஆயிடினும்
கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ
(17)
அம்பலத்தே கூத்தாடி அமுது செயப் பலிதிரியும்
நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ
நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசா என்றேத்தின காண் சாழலோ
(18)
சலமுடைய சலந்தரன் தன் உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்(கு) அன்றருளியவாறென்னேடீ
நலமுடைய நாரணன்தன் நயனம் இடந்(து) அரனடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ
(19)
அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங்(கு) ஏதமுது செய்திடினும்
தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ
(20)
அருந்தவருக்காலின்கீழ் அறமுதலா நான்கனையும்
இருந்தவருக்கருளும் அது எனக்கறிய இயம்பேடீ
அருந்தவருக்கற முதல் நான்கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக்குலகியற்கை தெரியா காண் சாழலோ
