(1)
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து, உன் விரையார் கழற்குஎன்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி, உள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன், உடையாய் என்னைக் கண்டுகொள்ளே
(2)
கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடியாரொடுடல்லால், நரகம் புகினும்
எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறின், இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல்லாதெங்கள் உத்தமனே
(3)
உத்தமன் – அத்தன் – உடையான் – அடியே நினைந்துருகி
மத்த மனத்தொடு மால்இவன் என்ன மனநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்தெவருந்
தத்தம் மனத்தன பேச, எஞ்ஞான்றுகொல் சாவதுவே
(4)
சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர்தின்று, நஞ்சம்அஞ்சி
ஆவஎந்தாய் என்றவிதா விடும் நம்மவர் அவரே
மூவரென்றே எம்பிரானொடும் எண்ணி – விண்ணாண்டு மண்மேல்
தேவரென்றே இறுமாந்(து) – என்ன பாவந் திரிதவரே
(5)
தவமே புரிந்திலன் தண்மலர் இட்டு முட்டாதிறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினையேன் உனக்கன்பருள்ளாஞ்
சிவமே பெறுந் திருவெய்திற்றிலேன், நின்திருவடிக்காம்
பவமே அருளு கண்டாய் அடியேற்கெம் பரம்பரனே
(6)
பரந்துபல் ஆய்மலர் இட்டு முட்டாதடியே இறைஞ்சி
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பருள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே, நின்றன் வார்கழற்கன்பெனக்கும்
நிரந்தரமாய் அருளாய் – நின்னை ஏத்த முழுவதுமே
(7)
முழுவதுங் கண்டவனைப் படைத்தான் முடிசாய்த்து முன்னாள்
செழுமலர் கொண்டெங்குந் தேட அப்பாலன், இப்பால் எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகமாடிக் கதியிலியாய்
உழுவையின் தோலுடுத்(து) உன்மத்தம் மேல்கொண்டுழி தருமே
(8)
உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும்
இழிதரு காலம் எக்காலம் – வருவது வந்ததற்பின்
உழிதரு காலத்த, உன்னடியேன் செய்த வல்வினையைக்
கழிதரு காலமுமாய் அவை காத்தெம்மைக் காப்பவனே
(9)
பவன்எம் பிரான், பனிமாமதிக் கண்ணி விண்ணோர் பெருமான்
சிவன்எம் பிரான், என்னை ஆண்டுகொண்டான் என்சிறுமை கண்டும்
அவன்எம் பிரான்என்ன – நான்அடியேன்என்ன – இப்பரிசே
புவன்எம் பிரான் தெரியும் பரிசாவதியம்புகவே
(10)
புகவே தகேன் உனக்கன்பருள் யான் என் பொல்லா மணியே
தகவே எனை உனக்காட்கொண்ட தன்மை – எப்புன்மையரை
மிகவே உயர்த்தி விண்ணோரைப் பணித்தி – அண்ணா அமுதே
நகவே தகும் எம்பிரான்என்னை – நீசெய்த நாடகமே
அறிவுறுத்தல்:
(11)
நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே, இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள் எம்உடையானே
(12)
யானேதும் பிறப்பஞ்சேன் – இறப்பதனுக்கென் கடவேன்
வானேயும் பெறில்வேண்டேன் – மண்ணாள்வான் மதித்தும்இரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேஎம் பெருமான், !எம்
மானே – உன்அருள் பெறுநாள் என்றென்றே வருந்துவனே
(13)
வருந்துவன் நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாயடியேன்
இருந்துநல மலர்புனையேன், ஏத்தேன் நாத்தழும்பேறப்
பொருந்திய பொற்சிலை குனித்தாய் – அருளமுதம் புரியாயேல்
வருந்துவன் நத்தமியேன் மற்றென்னே நான்ஆமாறே
(14)
ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன்
பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன், புத்தேளிர்
கோமான்நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே
(15)
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனதென்றவர்அவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
(16)
வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் – மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாந் தொழவேண்டிச்
சூழ்த்து மதுகர முரலுந் தாரோயை – நாயடியேன்
பாழ்த்த பிறப்பறுத்திடுவான் யானும்உன்னைப் பரவுவனே
(17)
பரவுவார் இமையோர்கள், பாடுவன நால்வேதம்
குரவுவார் குழல்மடவாள் கூறுடையாள் ஒருபாகம்
விரவுவார் மெய்யன்பின் அடியார்கள் மேன்மேல்உன்
அரவுவார் கழலிணைகள் காண்பாரோ அரியானே
(18)
அரியானே யாவர்க்கும், அம்பரவா அம்பலத்தெம்
பெரியானே, சிறியேனை ஆட்கொண்ட பெய்கழற்கீழ்
விரையார்ந்த மலர்தூவேன் – வியந்தலறேன் – நயந்துருகேன்
தரியேன்நான் ஆமாறென் சாவேன்நான் சாவேனே
(19)
வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச் செவ்வாய்க்கரிய
பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே
ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான் இன்றுபோய்
வானுளான் காணாய்நீ, மாளா வாழ்கின்றாயே
(20)
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப் !பட்
டாழ்கின்றாய், ஆழாமற் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய், கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய்நீ – அவலக் கடலாய வெள்ளத்தே
சுட்டறுத்தல்:
(21)
வெள்ளந்தாழ் விரிசடையாய், விடையாய், விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மேலாகப்
பதைத்துருகும் அவர்நிற்க, என்னை !ஆண்டாய்க்
குள்ளந்தாள் நின்றுச்சியளவும் நெஞ்சாய்
உருகாதால் – உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் – நெஞ்சம் கல்லாம்
கண்ணிணையும் மரமாம் தீவினையினேற்கே
(22)
வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போது, ‘நான் வினைக்கேடன்’ என்பாய் போல
இனையன்நான் என்றுன்னை அறிவித்தென்னை
ஆட்கொண்டெம்பிரான் ஆனாய்க்(கு), இரும்பின் பாவை
அனையநான் பாடேன் – நின்றாடேன் – அந்தோ
அலறிடேன், உலறிடேன், ஆவி சோரேன்
முனைவனே முறையோ நான்ஆனவாறு
முடிவறியேன் முதல்அந்தம் ஆயினானே
(23)
ஆய நான்மறையவனும் நீயேயாதல்
அறிந்தியான் யாவரினுங் கடையனாய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு
நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்
அடியார்தாம் இல்லையே அன்றிமற்றோர்
பேயனேன் இதுதான்நின் பெருமையன்றே
எம்பெருமான் என்சொல்லிப் பேசுகேனே
(24)
பேசிற்றாம் ஈசனே – எந்தாய் – எந்தை
பெருமானே – என்றென்றே பேசிப் பேசிப்
பூசிற்றாம் திருநீறே நிறையப் பூசிப்
போற்றியெம் பெருமானே என்று பின்றா
நேசத்தாற் பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே, அவாவெள்ளக் கள்வனேனை
மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
என்னைநீ ஆட்கொண்ட வண்ணந் தானே
(25)
வண்ணந்தான் சேயதன்று – வெளிதேஅன்று
அநேகன் – ஏகன் – அணு – அணுவில்இறந்தாய் – !என்றங்
கெண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமாறறியாத எந்தாய், உன்றன்
வண்ணந்தானது காட்டி – வடிவு காட்டி
மலர்க்கழல்கள் அவை காட்டி – வழியற்றேனைத்
திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்
எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக்கேனே
(26)
சிந்தனை நின்றனக்காக்கி, நாயினேன்தன்
கண்ணிணைநின் திருப்பாதப் போதுக்காக்கி
வந்தனையும் அம்மலர்க்கேஆக்கி, வாக்குன்
மணி வார்த்தைக்காக்கி, ஐம்புலன்கள் ஆர
வந்தனை ஆட்கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே – மலையே – உன்னைத்
தந்தனை – செந்தாமரைக் காடனைய மேனித்
தனிச்சுடரே, இரண்டுமிலித் தனியனேற்கே
(27)
தனியனேன் பெரும்பிறவிப் பௌவத்தெவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு, பற்றொன்றின்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற்
கலக்குண்டு, காமவான் சுறவின் !வாய்ப்பட்
டினியென்னே உய்யுமா(று) என்றென்றெண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை
முனைவனே – முதல் அந்தம் இல்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே
(28)
கேட்டாரும் அறியாதான், கேடொன்றில்லான்
கிளையிலான், கேளாதே எல்லாங் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு, நாயினேற்கே
காட்டாதன எல்லாங் காட்டிப் பின்னுங்
கேளாதன எல்லாங் கேட்பித்தென்னை
மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே
(29)
விச்சைதான் இதுஒப்பதுண்டோ கேட்கின்,
மிகுகாதல் அடியார்தம் அடியனாக்கி
அச்சந் தீர்த்தாட் கொண்டான், அமுதம் ஊறி
அகம்நெகவே புகுந்தாண்டான் அன்பு கூர,
அச்சன் – ஆண்பெண்அலி – ஆகாசமாகி
ஆரழலாய் – அந்தமாய் – அப்பால் நின்ற
செச்சைமா மலர்புரையும் மேனிஎங்கள்
சிவபெருமான், எம்பெருமான், தேவர் கோவே
(30)
தேவர்கோ அறியாத தேவ தேவன்
செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை
மூவர்கோனாய் நின்ற முதல்வன் – மூர்த்தி
மூதாதை – மாதாளும் பாகத்தெந்தை
யாவர்கோன் என்னையும் வந்தாண்டு கொண்டான்
யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவனடியார் அடியாரோடும்
மேன்மேலுங் குடைந்தாடி ஆடுவோமே
ஆத்துமசுத்தி:
(31)
ஆடுகின்றிலை, கூத்துடையான் கழற்கன்பிலை, என்புருகிப்
பாடுகின்றிலை, பதைப்பதும் செய்கிலை, பணிகிலை, பாதமலர்
சூடுகின்றிலை, சூட்டுகின்றதுமிலை, துணையிலி பிணநெஞ்சே
தேடுகின்றிலை தெருவுதோ(று), அலறிலை, செய்வதொன்றறியேனே
(32)
அறிவிலாத எனைப் புகுந்தாண்டு கொண்டறிவதை அருளி – மேல்
நெறியெலாம் புலமாக்கிய எந்தையைப், பந்தனை அறுப்பானைப்
பிறிவிலாத இன்னருள்கள் பெற்றிருந்து மாறாடுதி பிணநெஞ்சே
கிறியெலாம் மிகக் கீழ்ப்படுத்தாய், கெடுத்தாய் என்னைக் கெடுமாறே
(33)
மாறி நின்றெனைக் கெடக் கிடந்தனையை – எம் மதியிலி மடநெஞ்சே,
தேறுகின்றிலம் – இனியுனைச் சிக்கெனச் சிவனவன் திரள்தோள்மேல்
நீறு நின்றது கண்டனையாயினும் நெக்கிலை, இக்காயம்
கீறுகின்றிலை, கெடுவதுன் பரிசிது கேட்கவுங் கில்லேனே
(34)
கிற்றவா மனமே கெடுவாய் – உடையான் – அடி நாயேனை
விற்றெலாம் மிக ஆள்வதற்குரியவன், விரைமலர்த் திருப்பாதம்
முற்றிலா இளந்தளிர் பிரிந்திருந்துநீ உண்டனஎல்லாம் முன்
அற்றவாறும், நின்னறிவும், நின் பெருமையும் அளவறுக்கில்லேனே
(35)
அளவறுப்பதற்கரியவன் இமையவர்க்(கு), அடியவர்க்கெளியான், நம்
களவறுத்து நின்றாண்டமை கருத்தினுட் கசிந்துணர்ந்திருந்தேயும்
உளகறுத்துனை நினைந்துளம் பெருங்களன் செய்ததுமிலை நெஞ்சே
பளகறுத்துடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே
(36)
புகுவதாவதும், போதரவில்லதும், பொன்னகர் புகப் போதற்(கு)
உகுவதாவதும், எந்தையெம் பிரான் – என்னை ஆண்டவன் கழற்கன்பு
நெகுவதாவதும், நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி
மிகுவதாவதும், இன்றெனின் மற்றிதற்கென் செய்கேன் வினையேனே
(37)
வினைஎன் போல் உடையார் பிறர்ஆர்? உடையான் அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பன்று மற்றதனாலே
முனைவன் பாத நன்மலர் பிரிந்திருந்து நான்முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை இரும்பு – கல் மனம் – செவி இன்னதென்றறியேனே
(38)
ஏனை யாவரும் எய்திடலுற்று மற்றின்னதென்றறியாத
தேனை – ஆன்நெயைக் – கரும்பின்இன் தேறலைச், சிவனை, என் சிவலோகக்
கோனை, மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம்
ஊனை யான் இருந்தோம்புகின்றேன், கெடுவேன் உயிர் ஓயாதே
(39)
ஓய்விலாதன, உவமனில் இறந்தன, ஒண்மலர்த் தாள் தந்து
நாயிலாகிய குலத்தினுங் கடைப்படும் என்னை நன்னெறி காட்டித்
தாயிலாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன்
தீயில் வீழ்கிலேன், திண்வரை உருள்கிலேன், செழுங்கடல் புகுவேனே
(40)
வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும் அதுதனை நினையாதே
மான்நிலாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித்
தேன் நிலாவிய திருவருள் புரிந்தஎன் சிவன்நகர் புகப்போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத்திருந்தேனே
கைம்மாறு கொடுத்தல்:
(41)
இருகை யானையை ஒத்திருந்தென் உளக்
கருவை யான் கண்டிலேன், கண்டதெவ்வமே
வருகவென்று பணித்தனை, வானுளோர்க்கு
ஒருவனே, கிற்றிலேன் – கிற்பன் உண்ணவே
(42)
உண்டொர் ஒண்பொருள் என்றுணர்வார்க்கெலாம்
பெண்டிர் ஆண்அலி என்றறியொண்கிலை
தொண்டனேற்குள்ளவா வந்து தோன்றினாய்
கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே
(43)
மேலை வானவரும் அறியாததோர்
கோலமே, எனை ஆட்கொண்ட கூத்தனே
ஞாலமே, விசும்பே, இவை வந்துபோம்
காலமே, உனை என்றுகொல் காண்பதே
(44)
காணலாம் பரமே, கட்கிறந்ததோர்
வாணிலாம் பொருளே, இங்கொர் பார்ப்பெனப்
பாணனேன் படிற்றாக்கையை விட்டுனைப்
பூணுமாறறியேன் புலன் போற்றியே
(45)
போற்றியென்றும் புரண்டும் புகழ்ந்தும் !நின்
றாற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்
ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங்
கூற்றம் அன்னதொர் கொள்கையென் கொள்கையே
(46)
கொள்ளுங் கொல்லெனை அன்பரிற் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே
(47)
எந்தையாய், எம்பிரான் மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய் தம்பிரான், தனக்கஃதிலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவருஞ்
சிந்தையாலும் அறிவருஞ் செல்வனே
(48)
செல்வம் நல்குரவின்றி விண்ணோர் புழுப்
புல் வரம்பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லையில் கழல் கண்டும் பிரிந்தனன்
கல்வகை மனத்தேன் பட்ட கட்டமே
(49)
கட்டறுத்தெனை ஆண்டு, கண்ணார !நீ
றிட்ட அன்பரொடு யாவருங் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டினோடிரண்டும் அறியேனையே
(50)
அறிவனே அமுதே, அடி நாயினேன்
அறிவனாகக் கொண்டோ எனை ஆண்டது?
அறிவிலாமையன்றே கண்ட(து), ஆண்டநாள்
அறிவனோ அல்லனோ? அருள் ஈசனே
அனுபோக சுத்தி:
(51)
ஈசனே, என் எம்மானே
எந்தை பெருமான், என்பிறவி
நாசனே, நான் யாதுமொன்று
அல்லாப் பொல்லா நாயான
நீசனேனை ஆண்டாய்க்கு
நினைக்க மாட்டேன் கண்டாயே
தேசனே, அம்பலவனே,
செய்வதொன்றும் அறியேனே
(52)
செய்வதறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர் பெறும் பேறத்தனையும் பெறுதற்குரியேன், பொய்யிலா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்யனேன் நான் உண்டுடுத்திங்கிருப்பதானேன் போர்ஏறே
(53)
போரேறே நின் பொன்னகர்வாய் நீபோந்தருளி இருள்நீக்கி
வாரேர் இளமென் முலையாளோடுடன் வந்தருள, அருள்பெற்ற
சீரேறடியார் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண்கெட்ட
ஊரேறாய் இங்குழல்வேனோ கொடியேன் உயிர்தான் உலவாதே
(54)
உலவாக் காலந் தவமெய்தி
உறுப்பும் வெறுத்திங்குனைக் காண்பான்
பலமா முனிவர் நனிவாடப்
பாவியேனைப் பணிகொண்டாய்
மலமாக் குரம்பை இதுமாய்க்க
மாட்டேன் – மணியே உனைக்காண்பான்
அலவா நிற்கும் அன்பிலேன்
என்கொண்டெழுகேன் எம்மானே
(55)
மானோர் நோக்கி உமையாள் பங்கா, வந்திங்காட்கொண்ட
தேனே, அமுதே, கரும்பின் தெளிவே, சிவனே, தென்தில்லைக்
கோனே, உந்தன் திருக்குறிப்புக் கூடுவார் நின்கழல் கூட
ஊனார் புழுக்கூடிது காத்திங்கிருப்பதானேன் உடையானே
(56)
உடையானே நின்றனை உள்கி – உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் – உடையாய் – நின்பாதஞ் சேரக் கண்டிங்கூர் நாயிற்
கடையானேன், நெஞ்சுருகாதேன், கல்லா மனத்தேன், கசியாதேன்
முடையார் புழுக்கூடிது காத்திங்கிருப்பதாக முடித்தாயே
(57)
முடித்தவாறும் என்றனக்கே
தக்கதே, முன் அடியாரைப்
பிடித்தவாறும் சோராமற்
சோரனேன் இங்கொருத்தி வாய்
துடித்தவாறும், துகிலிறையே
சோர்ந்தவாறும், முகங்குறுவேர்
பொடித்தவாறும், இவையுணர்ந்து
கேடென்றனக்கே சூழ்ந்தேனே
(58)
தேனைப் பாலைக், கன்னலின்
தெளிவை, ஒளியைத், தெளிந்தார்தம்
ஊனை உருக்கும் உடையானை
உம்பரானை, வம்பனேன்
நானின்னடியேன் நீஎன்னை
ஆண்டாய் என்றால் அடியேற்குத்
தானுஞ் சிரித்தே, அருள்அலாந்
தன்மையாம் என் தன்மையே
(59)
தன்மை பிறரால் அறியாத
தலைவா, பொல்லா நாயான
புன்மையேனை ஆண்டையா
புறமே போக விடுவாயோ?
என்னை நோக்குவார் யாரே
என்நான் செய்கேன் – எம்பெருமான்
பொன்னே திகழுந் திருமேனி
எந்தாய், எங்குப் புகுவேனே?
(60)
புகுவேன் எனதே நின்பாதம்
போற்றும் அடியாருள் நின்று
நகுவேன் பண்டு தோள்நோக்கி
நாணமில்லா நாயினேன்
நெகும் அன்பில்லை நினைக்காண
நீஆண்டருள அடியேனுந்
தகுவனே என் தன்மையே
எந்தாய், அந்தோ தரியேனே
காருணியத்திரங்கல்:
(61)
தரிக்கிலேன் காய வாழ்க்கை
சங்கரா போற்றி, வான
விருத்தனே போற்றி, எங்கள்
விடலையே போற்றி, ஒப்பில்
ஒருத்தனே போற்றி, உம்பர்
தம்பிரான் போற்றி, தில்லை
நிருத்தனே போற்றி, எங்கள்
நின்மலா போற்றி போற்றி
(62)
போற்றிஓம் நமச்சிவாய
புயங்கனே மயங்குகின்றேன்
போற்றிஓம் நமச்சிவாய
புகலிடம் பிறிதொன்றில்லை
போற்றிஓம் நமச்சிவாய
புறம்எனைப் போக்கல் கண்டாய்
போற்றிஓம் நமச்சிவாய
சயசய போற்றி போற்றி
(63)
போற்றி என்போலும் பொய்யர்
தம்மைஆட்கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி
நாதனே போற்றி போற்றி
போற்றிநின் கருணை வெள்ளப்
புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்றியமானன் வானம்
இருசுடர்க் கடவுளானே
(64)
கடவுளே போற்றி, என்னைக்
கண்டுகொண்டருளு போற்றி
விடவுளே உருக்கி என்னை
ஆண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைந்திட்டொல்லை
உம்பர் தந்தருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த
சங்கரா போற்றி போற்றி
(65)
சங்கரா போற்றி, மற்றோர்
சரணிலேன் போற்றி, கோலப்
பொங்கரா அல்குற் செவ்வாய்
வெண்ணகைக் கரிய வாட்கண்
மங்கையோர் பங்க போற்றி
மால்விடை ஊர்தி போற்றி
இங்கு வாழ்வாற்றகில்லேன்
எம்பிரான் இழித்திட்டேனே
(66)
இழித்தனன் என்னை யானே
எம்பிரான் போற்றி போற்றி
பழித்திலேன் உன்னை என்னை
ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம்
பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடிவ்வாழ்வு போற்றி
உம்பர் நாட்டெம்பிரானே
(67)
எம்பிரான் போற்றி, வானத்தவர் அவர் ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல் மங்கை கூற – வெண்ணீற போற்றி
செம்பிரான் போற்றி, தில்லைத் திருச்சிற்றம்பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி
(68)
ஒருவனே போற்றி, ஒப்பில்
அப்பனே போற்றி, வானோர்
குருவனே போற்றி, எங்கள்
கோமளக் கொழுந்து போற்றி
வருக என்றென்னை நின்பால்
வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி
தமியனேன் தனிமை தீர்த்தே
(69)
தீர்ந்த அன்பாய அன்பர்க்கவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும்என் பொய்ம்மை ஆட்கொண்டருளிடும் பெருமை போற்றி
வார்ந்த நஞ்சயின்று வானோர்க்கமுதம் ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்தநின் பாதம் நாயேற்கருளிட வேண்டும் போற்றி
(70)
போற்றி இப்புவனம் நீர்தீக்
காலொடு வானம் ஆனாய்
போற்றி எவ்வுயிர்க்குந் தோற்றம்
ஆகிநீ தோற்றமில்லாய்
போற்றி எல்லாஉயிர்க்கும்
ஈறாய் ஈறின்மை ஆனாய்
போற்றிஐம் புலன்கள் நின்னைப்
புணர்கிலாப் புணர்க்கையானே
ஆனந்தத்தழுந்தல்:
(71)
புணர்ப்பதொக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்பதன்றி(து) என்ற போது நின்னொடென்னொ(டு) என்னிதாம்
புணர்ப்பதாக அன்றிதாக அன்புநின் கழற்கணே
புணர்ப்பதாக அங்கணாள புங்கமான போகமே
(72)
போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி இன்பமும்
ஏக நின்கழல் இணையலாதிலேன் என்எம்பிரான்
ஆகம் விண்டு – கம்பம் வந்து – குஞ்சி அஞ்சலிக்கணே
ஆக என்கை – கண்கள் தாரைஆறதாக ஐயனே
(73)
ஐய நின்னதல்லதில்லை மற்றொர் பற்று, வஞ்சனேன்
பொய் கலந்த(து) அல்லதில்லை பொய்ம்மையேன் என்எம்பிரான்
மைகலந்த கண்ணி பங்க – வந்து நின் கழற்கணே
மெய் கலந்த அன்பர் அன்பெனக்குமாக வேண்டுமே
(74)
வேண்டும் நின் கழற்கண் அன்பு, பொய்ம்மை
தீர்த்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ
என்றருளுநீ
பூண்டு கொண்டடியனேனும் போற்றி
போற்றி என்றும் என்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன
நின் வணங்கவே
(75)
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் !ஓலமிட்
டுணங்கு நின்னை எய்தலுற்று மற்றொர்உண்மை இன்மையின்
வணங்கி யாம் விடேங்கள் என்ன வந்து !நின்றருளுதற்
கிணங்கு கொங்கை மங்கை பங்க – என்கொலோ நினைப்பதே
(76)
நினைப்பதாக சிந்தை செல்லும் எல்லைஏய வாக்கினால்
தினைத்தனையும் ஆவதில்லை சொல்லலாவ கேட்பவே
அனைத்துலகுமாய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்தெனைத்த(து) எதெப்புறத்த(து) எந்தைபாதம் எய்தவே
(77)
எய்தலாவதென்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு
உய்தலாவதுன் கணன்றி மற்றொர் உண்மை இன்மையின்
பைதலாவதென்று பாதுகாத்திரங்கு !பாவியேற்
கீதலாது நின்கணொன்றும் வண்ணமில்லை ஈசனே
(78)
ஈசனேநீ அல்லதில்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன்ஒர் பேதமின்மை பேதையேன் என் எம்பிரான்
நீசனேனை ஆண்டு கொண்ட நின்மலா ஓர் நின்னலால்
தேசனேஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே
(79)
சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரில் ஐம்புலன்களான்
முந்தையான காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்
வெந்தையா விழுந்திலேன் – என் உள்ளம்வெள்கி விண்டிலேன்
எந்தையாய நின்னை இன்னம் எய்தலுற்றிருப்பனே
(80)
இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள்
கருப்பு மட்டு வாய் மடுத்தெனைக் கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டிருந்த(து) உண்டதாயினும்
விருப்பும்உண்டு நின்கண் என்கண் என்பதென்ன விச்சையே
ஆனந்த பரவசம்:
(81)
விச்சுக்கேடு பொய்க்காகா(து) என்றிங்கெனை வைத்தாய்
இச்சைக்கானார் எல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார்
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர்எம்
பிச்சைத் தேவா என்னான் செய்கேன் பேசாயே
(82)
பேசப்பட்டேன், நின்னடியாரில் திருநீறே
பூசப்பட்டேன், பூதலரால்உன் அடியான் என்று
ஏசப்பட்டேன், இனிப் படுகின்ற(து)அமையாதால்
ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே
(83)
அடியேன் அல்லேன்கொல்லோ, தானெனை ஆட்கொண்டிலை
கொல்லோ
அடியாரானார் எல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார்
செடிசேர் உடலம்இது நீக்க மாட்டேன் எங்கள் சிவலோகா
கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே
(84)
காணுமாறு காணேன் உன்னை அந்நாட் கண்டேனும்
பாணே பேசி என்தன்னைப் படுத்ததென்ன பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆரமுதே அத்தா – செத்தே போயினேன்
ஏணாணில்லா நாயினேன் என் கொண்டெழுகேன் எம்மானே
(85)
மானேர் நோக்கி உடையாள் பங்கா – மறையீறறியா மறையோனே
தேனே அமுதே, சிந்தைக்கரியாய், சிறியேன் பிழை பொறுக்குங்
கோனே, சிறிதே கொடுமை பறைந்தேன் – சிவமா நகர் குறுகப்
போனார் அடியார், யானும் பொய்யும் புறமே போந்தோமே
(86)
புறமே போந்தோம் பொய்யும் யானும், மெய்யன்பு
பெறவே வல்லேன், அல்லா வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன்றறியாதார்
சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள் சேர்ந்தாரே
(87)
தாராய் உடையாய் அடியேற்குன் தாளிணை அன்பு
பேரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்
ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்திங்குன் தாளிணை !அன்புக்
காரா அடியேன், அயலே மயல் கொண்டழுகேனே
(88)
அழுகேன், நின்பால் அன்பாம் மனமாய் அழல்சேர்ந்த
மெழுகே அன்னார் மின்னார் பொன்னார் கழல்கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடுந் தொடராதே
பழுதே பிறந்தேன், என் கொண்டுன்னைப் பணிகேனே
(89)
பணிவார் பிணிதீர்த்தருளிப் பழைய அடியார்க்குன்
அணியார் பாதங் கொடுத்தி, அதுவும் அரிதென்றால்
திணியார் மூங்கிலனையேன் வினையைப் பொடியாக்கித்
தணியார் பாதம் வந்தொல்லை தாராய் பொய்தீர் மெய்யானே
(90)
யானேபொய், என்நெஞ்சும் பொய், என்அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே, கரும்பின் தெளிவே, தித்திக்கும்
மானே, அருளாய் அடியேன் உனை வந்துறுமாறே
ஆனந்தாதீதம்:
(91)
மாறிலாத மாக்கருணை வெள்ளமே
வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை
வேறிலாப் பதப் பரிசு பெற்றநின்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
ஈறிலாத நீ எளியையாகி !வந்
தொளிசெய் மானுடமாக நோக்கியுங்
கீறிலாத நெஞ்சுடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே
(92)
மையிலங்கு நற்கண்ணி பங்கனே
வந்தெனைப் பணி கொண்டபின் !மழக்
கையிலங்கு பொற்கிண்ணம் என்றலால்
அரியை என்றுனைக் கருதுகின்றிலேன்
மெய்யிலங்கு வெண்ணீற்று மேனியாய்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
பொய்யிலங்கெனைப் புகுத விட்டுநீ
போவதோ சொலாய் பொருத்தமாவதே
(93)
பொருத்தம் இன்மையேன் பொய்ம்மை உண்மையேன்
போத என்றெனைப் புரிந்து நோக்கவும்
வருத்தம் இன்மையேன், வஞ்சம் உண்மையேன்
மாண்டிலேன் மலர்க்கமல பாதனே
அரத்த மேனியாய் அருள்செய், அன்பரும்
நீயும் அங்கெழுந்தருளி இங்கெனை
இருத்தினாய், முறையோ என் எம்பிரான்
வம்பனேன் வினைக்கிறுதி இல்லையே
(94)
இல்லை நின்கழற்கன்ப(து) என்கணே
ஏலம் ஏலுநற் குழலி பங்கனே
கல்லை மென் கனியாக்கும் விச்சை !கொண்
டென்னை நின் கழற்கன்பன் ஆக்கினாய்
எல்லையில்லை நின்கருணை எம்பிரான்
ஏது கொண்டுநான் ஏது செய்யினும்
வல்லையே எனக்கின்னும் உன் கழல்
காட்டி மீட்கவும் மறுவில் வானனே
(95)
வான நாடரும் அறியொணாதநீ
மறையில் ஈறுமுன் தொடரொணாதநீ
ஏனை நாடருந் தெரியொணாதநீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
ஊனை நாடகம் ஆடுவித்தவா
உருகி நான்உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடுவித்தவா
நைய வையகத்துடைய விச்சையே
(96)
விச்சதின்றியே விளைவு செய்குவாய்
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும்
புலையனேனை உன் கோயில் வாயிலிற்
பிச்சனாக்கினாய், பெரிய !அன்பருக்
குரியனாக்கினாய், தாம் வளர்த்ததோர்
நச்சு மாமரமாயினுங் கொலார்
நானும் அங்ஙனே உடைய நாதனே
(97)
உடைய நாதனே போற்றி, நின்னலால்
பற்று மற்றெனக்காவதொன்றினி
உடையனோ பணி போற்றி, உம்பரார்
தம் பராபரா போற்றி, யாரினுங்
கடையனாயினேன் போற்றி, என்பெருங்
கருணையாளனே போற்றி, என்னைநின்
அடியனாக்கினாய் போற்றி, ஆதியும்
அந்தமாயினாய் போற்றி அப்பனே
(98)
அப்பனே எனக்கமுதனே !ஆ
னந்தனே, அகம்நெக அள்ளூறுதேன்
ஒப்பனே, உனக்குரிய அன்பரில்
உரியனாய் உனைப்பருக நின்றதோர்
துப்பனே, சுடர் முடியனே, துணை
யாளனே, தொழும்பாளர் எய்ப்பினில்
வைப்பனே, எனை வைப்பதோ சொலாய்
நைய வையகத்தெங்கள் மன்னனே
(99)
மன்ன எம்பிரான் வருக என்னெனை
மாலும் நான்முகத்தொருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என்னெனை
முழுதும் யாவையும் இறுதியுற்ற நாள்
பின்ன எம்பிரான் வருக என்னெனைப்
பெய்கழற் கண் அன்பாயென் நாவினாற்
பன்ன எம்பிரான் வருக என்னெனைப்
பாவநாச நின் சீர்கள் பாடவே
(100)
பாட வேண்டும்நான் போற்றி நின்னையே
பாடி நைந்து நைந்துருகி நெக்கு!நெக்
காட வேண்டும்நான் போற்றி !அம்பலத்
தாடு நின்கழற் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி, இப்புழுக்
கூடு நீக்கெனைப் போற்றி, பொய்யெலாம்
வீடவேண்டும்நான் போற்றி, !வீடுதந்
தருளு போற்றி, நின் மெய்யர் மெய்யனே
