திருஅம்மானை

<– திருவாசகம்

(1)
செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட்டெந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்

(2)
பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார்
ஆராலும் காண்டற்கரியான், எமக்கெளிய
பேராளன், தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி, வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய், அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்

(3)
இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச், சிவன் அவனிவந்தருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச்
சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான்
பந்தம் பறியப் பரிமேற் கொண்டான் தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்

(4)
வான்வந்த தேவர்களும் மாலயனோடிந்திரனும்
கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்(டு)
ஊன்வந்து ரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்

(5)
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித், தன்கருணை
வெள்ளத்தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம்பலம் மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்

(6)
கேட்டாயோ தோழி கிறி செய்தவாறொருவன்
தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டாதன எல்லாங் காட்டிச், சிவங்காட்டி
தாள் தாமரை காட்டித், தன்கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய – நாம்மேலை வீடெய்த
ஆட்டான் கொண்டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்

(7)
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானைச், சேவகனைத், தென்னன் பெருந்துறையின்
மேயானை, வேதியனை, மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத், தானே உலகேழும்
ஆயானை, ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்

(8)
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் – பெம்மான் – பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் – கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்

(9)
துண்டப் பிறையான், மறையான், பெருந்துறையான்
கொண்ட புரிநூலான், கோலமா ஊர்தியான்
கண்டங் கரியான், செம்மேனியான், வெண்ணீற்றான்
அண்ட முதலாயினான், அந்தமிலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழவடியார்க்கீந்தருளும்
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய்

(10)
விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப், பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்

(11)
செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்குந் தன்மையினான்
அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும்
அப்பாலைக்கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்

(12)
மைப்பொலியுங் கண்ணிகேள், மாலயனோடிந்திரனும்
எப்பிறவியுந் தேட, என்னையுந்தன் இன்னருளால்
இப்பிறவி ஆட்கொண்டினிப் பிறவாமே காத்து
மெய்ப்பொருட்கண் தோற்றமாய் – மெய்யே நிலைபேறாய்
எப்பொருட்குந் தானேயாய் – யாவைக்கும் வீடாகும்
அப்பொருளாம்நஞ் சிவனைப் பாடுதுங்காண் அம்மானாய்

(13)
கையார் வளைசிலம்பக், காதார் குழையாட
மையார் குழல்புரளத், தேன்பாய, வண்டொலிப்பச்
செய்யானை – வெண்ணீறணிந்தானைச் – சேர்ந்தறியாக்
கையானை – எங்குஞ் செறிந்தானை – அன்பர்க்கு
மெய்யானை – அல்லாதார்க்கல்லாத வேதியனை
ஐயாறமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்

(14)
ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்
ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந்தெய்த்தேனை
ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து
தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய
கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும்
வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய்

(15)
சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள் நெரித்திட்டெச்சன் தலையரிந்(து)
அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்

(16)
ஊனாய் உயிராய் உணர்வாய் என் உட்கலந்து
தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோர் அறியா வழிஎமக்குத் தந்தருளும்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் – சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்

(17)
சூடுவேன், பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள்
கூடுவேன், கூடி முயங்கி மயங்கிநின்று
ஊடுவேன், செவ்வாய்க்குருகுவேன், உள்ளுருகித்
தேடுவேன், தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்
வாடுவேன், பேர்த்து மலர்வேன், அனலேந்தி
ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்

(18)
கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை
வெளிவந்த மாலயனுங் காண்பரிய வித்தகனைத்
தெளிவந்த தேறலைச், சீரார் பெருந்துறையில்
எளி வந்திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால்
ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளிதிகழ
அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண் அம்மானாய்

(19)
முன்னானை, மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
பின்னானைப், பிஞ்ஞகனைப், பேணு பெருந்துறையின்
மன்னானை, வானவனை, மாதியலும் பாதியனைத்
தென் ஆனைக்காவானைத், தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கட்கின்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய்

(20)
பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித், தன்னடியார்
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே
பற்றிஇப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான்
பற்றிய பேரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page