உயிருண்ணிப் பத்து

<– திருவாசகம்

(1)
பைந்நாப்பட அரவேர்அல்குல் உமை பாகமதாய் என
மெய்ந்நாள் தொறும் பிரியா வினைக்கேடா – விடைப் பாகா
செந்நாவலர் பரசும் புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாள் களித்தெந்நாள் இறுமாக்கேன் இனியானே?

(2)
நானார்அடி அணைவான்? ஒரு நாய்க்குத் !தவிசிட்டிங்
கூனார்உடல் புகுந்தான் – உயிர்கலந்தான் – உளம் பிரியான்
தேனார் சடைமுடியான் – மன்னு திருப்பெருந்துறை உறைவான்
வானோர்களும் அறியாததோர் வளம் ஈந்தனன் எனக்கே

(3)
எனைநான் என்பதறியேன், பகல் இரவாவதும் அறியேன்
மனவாசகங் கடந்தான் எனை மத்தோன் மத்தனாக்கிச்
சினமால் விடைஉடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்
பனவன் எனைச்செய்த படிறறியேன் பரஞ்சுடரே

(4)
வினைக்கேடரும் உளரோ பிறர் சொல்லீர் வியனுலகில்?
எனைத்தான் புகுந்தாண்டான், எனதென்பின் புரையுருக்கிப்
பினைத் தான் புகுந்தெல்லே பெருந்துறையில்உறை பெம்மான்
மனத்தான் – கண்ணின் அகத்தான் – மறு மாற்றத்திடையானே

(5)
பற்றாங்கவை அற்றீர் – பற்றும் பற்றாங்கது பற்றி
நற்றாங்கதி அடைவோம் எனிற் – கெடுவீர் – ஓடி வம்மின்
தெற்றார் சடைமுடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கவன் கழல் பேணினரொடுங் கூடுமின் கலந்தே

(6)
கடலின் திரையது போல்வரு கலக்கம் மலம் அறுத்தென்
உடலும் எனதுயிரும் புகுந்தொழியாவணம் நிறைந்தான்
சுடருஞ் சுடர்மதி சூடிய திருப்பெருந்துறை உறையும்
படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன் தான்செய்த படிறே

(7)
வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம், வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப்பிறப்புச்,சிவம் வேண்டார் தமைநாளும்
தீண்டேன்,சென்று சேர்ந்தேன், மன்னு திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன் – புறம் போகேன், இனிப் புறம் போகலொட்டேனே

(8)
கோற்றேன் எனக்கென்கோ?, குரைகடல்வாய் அமுதென்கோ?
ஆற்றேன் எங்கள் அரனே, அருமருந்தே, எனதரசே
சேற்றார்வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை உறையும்
நீற்றார்தரு திருமேனி நின்மலனே, உனை யானே

(9)
எச்சம் அறிவேன் நான், எனக்கிருக்கின்றதை அறியேன்
அச்சோ எங்கள் அரனே – அருமருந்தே – எனதமுதே
செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம்என நெஞ்சில் மன்னி யானாகி நின்றானே

(10)
வான்பாவிய உலகத்தவர் தவமேசெய, அவமே
ஊன்பாவிய உடலைச் சுமந்தடவி மரமானேன்
தேன்பாய் மலர்க்கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய்
நான்பாவியன் – ஆனால் உனை நல்காய் எனலாமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page