கருடக் கொடியோன் காண மாட்டாக் கழற் சேவடி என்னும்
பொருளைத் தந்திங்கென்னை ஆண்ட பொல்லா மணியேயோ
இருளைத் துரந்திட்டிங்கே வா என்றங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே
(2)
மொய்ப்பால் நரம்பு கயிறாக, மூளை என்பு தோல்போர்த்த
குப்பாயம் புக்கிருக்ககில்லேன், கூவிக் கொள்ளாய் கோவேயோ
எப்பாலவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே
(3)
சீவார்ந்(து)ஈ மொய்த்தழுக்கொடு திரியுஞ் சிறுகுடிலிது சிதையக்
கூவாய் கோவே – கூத்தா – காத்தாட் கொள்ளுங் குருமணியே
தேவா, தேவர்க்கரியானே, சிவனே சிறிதென் முகநோக்கி
ஆவா என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே
(4)
மிடைந்தெலும்(பு) ஊத்தை மிக்கழுக்கூறல் வீறிலி நடைக்கூடந்
தொடர்ந்தெனை நலியத் துயருறுகின்றேன் சோத்தம்எம் பெருமானே
உடைந்து நைந்துருகி உன்னொளி நோக்கி உன்திருமலர்ப் பாதம்
அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே
(5)
அளிபுண்அகத்துப் புறந்தோல் மூடி, அடியேனுடை யாக்கை
புளியம் பழம் ஒத்திருந்தேன் – இருந்தும் விடையாய் பொடியாடீ
எளிவந்தென்னை ஆண்டு கொண்ட என்னாரமுதேயோ
அளியன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே
(6)
எய்த்தேன் நாயேன் இனியிங்கிருக்ககில்லேன் – இவ்வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் – வானோர் அறியா மலர்ச் சேவடியானே
முத்தா – உந்தன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண
அத்தா – சால ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே
(7)
பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதீ
வாராய் வாரா உலகந் தந்து வந்தாட் கொள்வானே
பேராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் எனஏத்த
ஆராஅமுதே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே
(8)
கையால் தொழுதுன் கழற்சேவடிகள் கழுமத் தழுவிக் !கொண்
டெய்யாதென்றன் தலைமேல் வைத்தெம் பெருமான் பெருமான் !என்
றையா என்றன் வாயால்அரற்றி அழல்சேர் மெழுகொப்ப
ஐயாற்றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே
(9)
செடியார் ஆக்கைத் திறமற வீசிச் சிவபுர நகர் புக்குக்
கடியார் சோதி கண்டு கொண்டென் கண்ணிணை களிகூரப்
படிதான் இல்லாப் பரம்பரனே உன் பழஅடியார் கூட்டம்
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே
(10)
வெஞ்சேலனைய கண்ணார்தம் வெகுளி வலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே நானோர் துணை காணேன்
பஞ்சேர் அடியாள் பாகத்தொருவா பவளத் திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே
