மையலாய் இந்த மண்ணிடை வாழ்வெனும்
ஆழியுள் அகப்பட்டுத்
தையலாரெனுஞ் சுழித்தலைப்பட்டு நான்
தலை தடுமாறாமே
பொய்யெலாம் விடத் திருவருள் தந்துதன்
பொன்னடியிணை காட்டி
மெய்யனாய் வெளிகாட்டி முன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே
(2)
ஏய்ந்த மாமலரிட்டு முட்டாததோர்
இயல்பொடும் வணங்காதே
சாந்தமார் முலைத் தையல் நல்லாரொடுந்
தலை தடுமாறாகிப்
போந்தி யான் துயர் புகாவணம் அருள்செய்து
பொற்கழலிணை காட்டி
வேந்தனாய் வெளியே என்முன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே
(3)
நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து
நான் எனதெனும் மாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக்
கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்(று) – அப்பெருமறை தேடிய
அரும்பொருள் – அடியேனை
அடித்தடித்து அக்காரமுன் தீற்றிய
அற்புதம் அறியேனே
(4)
பொருந்தும் இப்பிறப்பிறப்பிவை நினையாது
பொய்களே புகன்றுபோய்க்
கருங்குழலினார் கண்களால் ஏறுண்டு
கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத்
திருவொடும் அகலாதே
அருந் துணைவனாய் ஆண்டு கொண்டருளிய
அற்புதம் அறியேனே
(5)
மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும்
மங்கையர் தம்மோடுங்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு
குலாவியே திரிவேனை
வீடு தந்தெந்தன் வெந்தொழில் வீட்டிட
மென்மலர்க் கழல்காட்டி
ஆடுவித்தென(து) அகம் புகுந்தாண்டதோர்
அற்புதம் அறியேனே
(6)
வணங்கும் இப்பிறப்பிறப்பிவை நினையாது
மங்கையர் தம்மோடும்
பிணைந்து – வாயிதழ்ப் பெருவெள்ளத்தழுந்தி நான்
பித்தனாய்த் திரிவேனைக்
குணங்களுங் குறிகளுமிலாக் குணக்கடல்
கோமளத்தொடுங் கூடி
அணைந்து வந்தெனை ஆண்டுகொண்டருளிய
அற்புதம் அறியேனே
(7)
இப்பிறப்பினில் இணைமலர் கொய்துநான்
இயல்பொ(டு)அஞ்செழுத்தோதித்
தப்பிலாது பொற்கழல்களுக்கிடாது நான்
தடமுலையார் தங்கள்
மைப்புலாங் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை
மலரடியிணை காட்டி
அப்பன் என்னை வந்தாண்டு கொண்டருளிய
அற்புதம் அறியேனே
(8)
ஊசலாட்டும் இவ்வுடல் உயிராயின
இருவினை அறுத்தென்னை
ஓசையால் உணர்வார்க்குணர்வரியவன்
உணர்வு தந்தொளியாக்கிப்
பாசமானவை பற்றறுத்(து), உயர்ந்த தன்
பரம் பெருங்கருணையால்
ஆசை தீர்த்தடியார் அடிக்கூட்டிய
அற்புதம் அறியேனே
(9)
பொச்சையான இப்பிறவியிற் கிடந்துநான்
புழுத்தலை நாய்போல
இச்சையாயின ஏழையர்க்கே !செய்தங்
கிணங்கியே திரிவேனை
இச்சகத்தரி அயனும் எட்டாத தன்
விரைமலர்க் கழல்காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண்டருளிய
அற்புதம் அறியேனே
(10)
செறியும் இப்பிறப்பிறப்பிவை நினையாது
செறிகுழலார் செய்யுங்
கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும்
உன்னியே கிடப்பேனை
இறைவன் எம்பிரான் எல்லையில்லாத தன்
இணைமலர்க் கழல்காட்டி
அறிவு தந்தெனை ஆண்டு கொண்டருளிய
அற்புதம் அறியேனே
