அருட் பத்து

<– திருவாசகம்

(1)
சோதியே, சுடரே, சூழொளி விளக்கே
சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே, பரனே, பால்கொள் வெண்ணீற்றாய்
பங்கயத்தயனு(ம்) மாலறியா
நீதியே, செல்வத் திருப்பெருந்துறையில்
நிறைமலர்க் குருந்த மேவிய சீர்
ஆதியே, அடியேன் ஆதரித்தழைத்தால்
அதெந்துவே என்றருளாயே

(2)
நிருத்தனே, நிமலா, நீற்றனே, நெற்றிக்
கண்ணனே, விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே, உன்னை ஓலமிட்டலறி
உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்த மேவியசீர்
அருத்தனே, அடியேன் ஆதரித்தழைத்தால்
அதெந்துவே என்றருளாயே

(3)
எங்கணாயகனே, என்னுயிர்த் தலைவா
ஏலவார் குழலிமார் இருவர்
தங்கணாயகனே, தக்கநற் காமன்
தனதுடல் தழலெழ விழித்த
செங்கணாயகனே, திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்த மேவியசீர்
அங்கணா, அடியேன் ஆதரித்தழைத்தால்
அதெந்துவே என்றருளாயே

(4)
கமல நான்முகனும் – கார்முகில் நிறத்துக்
கண்ணனும் நண்ணுதற்கரிய
விமலனே – எமக்கு வெளிப்படாய் என்ன
வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்த மேவிய சீர்
அமலனே, அடியேன் ஆதரித்தழைத்தால்
அதெந்துவே என்றருளாயே

(5)
துடிகொள் நேரிடையாள் சுரிகுழல் மடந்தை
துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு
பொங்கொளி தங்கு மார்பினனே
செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்த மேவியசீர்
அடிகளே, அடியேன் ஆதரித்தழைத்தால்
அதெந்துவே என்றருளாயே

(6)
துப்பனே, தூயாய், தூயவெண்ணீறு
துதைந்தெழு துளங்கொளி வயிரத்து
ஒப்பனே, உன்னை உள்குவார் மனத்தின்
உறுசுவை அளிக்கும் ஆரமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்த மேவியசீர்
அப்பனே, அடியேன் ஆதரித்தழைத்தால்
அதெந்துவே என்றருளாயே

(7)
மெய்யனே, விகிர்தா, மேருவே வில்லா
மேவலர் புரங்கள் மூன்றெரித்த
கையனே, காலாற் காலனைக் காய்ந்த
கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே, செல்வத் திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்த மேவியசீர்
ஐயனே, அடியேன் ஆதரித்தழைத்தால்
அதெந்துவே என்றருளாயே

(8)
முத்தனே, முதல்வா, முக்கணா, முனிவா
மொட்டறா மலர் பறித்திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
பரகதி கொடுத்தருள் செய்யும்
சித்தனே, செல்வத் திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்த மேவியசீர்
அத்தனே, அடியேன் ஆதரித்தழைத்தால்
அதெந்துவே என்றருளாயே

(9)
மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
மறுமையோடிம்மையுங் கெடுத்த
பொருளனே, புனிதா, பொங்கு வாளரவம்
கங்கைநீர் தங்கு செஞ்சடையாய்
தெருளு நான்மறை சேர் திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்த மேவியசீர்
அருளனே, அடியேன் ஆதரித்தழைத்தால்
அதெந்துவே என்றருளாயே

(10)
திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்த மேவியசீர்
இருந்தவாறெண்ணி ஏசறா நினைந்திட்டு
என்னுடை எம்பிரான் !என்றென்
றருந்தவா நினைந்தே ஆதரித்தழைத்தால்
அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
போதராய் என்றருளாயே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page