அன்பில்ஆலந்துறை – சம்பந்தர் தேவாரம்:

<– அன்பில்ஆலந்துறை

(1)
கணைநீடெரி மாலரவம் வரைவில்லா
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணைமா மயிலுங் குயில்சேர் மடஅன்னம்
அணையும் பொழில் அன்பில்ஆலந்துறையாரே
(2)
சடையார், சதுரன், முதிரா மதிசூடி
விடையார் கொடி ஒன்றுடை எந்தை, விமலன்
கிடையார் ஒலியோத்தரவத்திசை கிள்ளை
அடையார் பொழில் அன்பில்ஆலந்துறையாரே
(3)
ஊரும் அரவஞ் சடைமேலுற வைத்துப்
பாரும் பலிகொண்டொலி பாடும் பரமர்
நீருண் கயலும் வயல்வாளை வராலோடு
ஆரும் புனல் அன்பில்ஆலந்துறையாரே
(4)
பிறையும் அரவும் உறவைத்த முடிமேல்
நறை உண்டெழு வன்னியும் மன்னு சடையார்
மறையும் பல வேதியர் ஓத ஒலிசென்று
அறையும் புனல் அன்பில்ஆலந்துறையாரே
(5)
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்
கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார்
மாடும் முழவம் அதிர மடமாதர்
ஆடும் பதி அன்பில்ஆலந்துறையாரே
(6)
நீறார் திருமேனியர், ஊனமிலார் பால்
ஊறார் சுவையாகிய உம்பர் பெருமான்
வேறார் அகிலும் மிகுசந்தனம் உந்தி
ஆறார் வயல் அன்பில்ஆலந்துறையாரே
(7)
செடியார் தலையில் பலிகொண்டினிதுண்ட
படியார் பரமன் பரமேட்டி தன்சீரைக்
கடியார் மலரும் புனல்தூவி நின்றேத்தும்
அடியார் தொழும் அன்பில்ஆலந்துறையாரே
(8)
விடத்தார் திகழும் மிடறன், நடமாடி
படத்தார் அரவம் விரவும் சடைஆதி
கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரையார
அடர்த்தார் அருள் அன்பில்ஆலந்துறையாரே
(9)
வணங்கிம் மலர்மேல் அயனும் நெடுமாலும்
பிணங்கி அறிகின்றிலர் மற்றும் பெருமை
சுணங்கும் முகத்தம் முலையாள் ஒருபாகம்
அணங்கும் நிகழ் அன்பில்ஆலந்துறையாரே
(10)
தறியார் துகில் போர்த்துழல்வார் சமண்கையர்
நெறியா உணரா நிலைக் கேடினர் நித்தல்
வெறியார் மலர் கொண்டடி வீழும் அவரை
அறிவார் அவர் அன்பில்ஆலந்துறையாரே
(11)
அரவார் புனல் அன்பில்ஆலந்துறை தன்மேல்
கரவாதவர் காழியுண் ஞானசம்பந்தன்
பரவார் தமிழ்பத்திசை பாடவல்லார் போய்
விரவாகுவர் வானிடை வீடெளிதாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page