அதிசயப் பத்து

<– திருவாசகம்

(1)
வைப்பு மாடென்று, மாணிக்கத்தொளியென்று
மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மட வரலியர் தங்கள்
திறத்திடை நைவேனை
ஒப்பிலாதன – உவமனில் இறந்தன
ஒண்மலர்த் !திருப்பாதத்
தப்பன் – ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே

(2)
நீதியாவன யாவையும் நினைக்கிலேன்
நினைப்பவரொடுங் கூடேன்
ஏதமே பிறந்திறந்துழல்வேன் தனை
என்னடியான் என்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன்
நிரந்தரமாய் நின்ற
ஆதி – ஆண்டு தன்அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே

(3)
முன்னை என்னுடைய வல்வினை போயிட
முக்கணதுடை எந்தை
தன்னை யாவரும் அறிவதற்கரியவன்,
எளியவன் அடியார்க்குப்,
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில்
இளமதியது வைத்த
அன்னை – ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே

(4)
பித்தன் என்றெனை உலகவர் பகர்வதோர்
காரணம் இதுகேளீர்
ஒத்துச் சென்றுதன் திருவருள் கூடிடும்
உபாயமதறியாமே
செத்துப் போய் அருநரகிடை !வீழ்வதற்
கொருப்படுகின்றேனை
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே

(5)
பரவுவார்அவர் பாடு சென்றணைகிலேன்
பன்மலர் பறித்தேத்தேன்
குரவுவார் குழலார் திறத்தே நின்று
குடி கெடுகின்றேனை
இரவு நின்றெரியாடிய எம்இறை
எரிசடை மிளிர்கின்ற
அரவன் – ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே

(6)
எண்ணிலேன் திருநாமஅஞ்செழுத்தும் என்
ஏழைமை அதனாலே,
நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடு
நல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்திறந்து !மண்ணாவதற்
கொருப்படுகின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே

(7)
பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந்துளுத்(து) !அசும்
பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதி நின்றிடர்க் கடற்
சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த
பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதியங் கண்டாமே

(8)
நீக்கி முன்எனைத் தன்னொடு நிலாவகை
குரம்பையிற் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து
நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய்யறத் !துகளறுத்
தெழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே

(9)
உற்ற ஆக்கையின் உறுபொருள் – நறுமலர்
எழுதரு நாற்றம்போல்
பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்
அப்பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும்
பித்தர்சொல் தெளியாமே
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே

(10)
இருள் திணிந்தெழுந்திட்டதோர் வல்வினைச்
சிறுகுடிலிது இத்தைப்
பொருள்எனக் களித்தரு நரகத்திடை
விழப் புகுகின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச்
சினப்பதத்தொடு செந்தீ
அருளும் மெய்ந்நெறி – பொய்ந்நெறி நீக்கிய
அதிசயங் கண்டாமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page