அச்சோப் பதிகம்

<– திருவாசகம்

(1)
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தன் எனக்கருளியவாறார் பெறுவார் அச்சோவே

(2)
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தை !எனக்
கறியும் வண்ணம் அருளியவாறார் பெறுவார் அச்சோவே

(3)
பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
தையல்இடங் கொண்ட பிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன் எனக்கருளியவாறார் பெறுவார் அச்சோவே

(4)
மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட்டென்னை உந்தன்
சுண்ண வெண்ணீறணிவித்துத் தூய்நெறியே சேரும் வண்ணம்
அண்ணல் எனக்கருளியவாறார் பெறுவார் அச்சோவே

(5)
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
அஞ்சேல் என்றருளியவாறார் பெறுவார் அச்சோவே

(6)
வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலை மேல் வீழ்வேனைப்
பந்தமறுத்தெனையாண்டு பரிசற என் துரிசுமறுத்(து)
அந்தமெனக்கருளியவாறார் பெறுவார் அச்சோவே

(7)
தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
உய்யுநெறி காட்டுவித்திட்டோங்காரத்துட் பொருளை
ஐயன் எனக்கருளியவாறார் பெறுவார் அச்சோவே

(8)
சாதல் பிறப்பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின் மிக்கணியிழையார் கலவியிலே விழுவேனை
மாதொரு கூறுடைய பிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஆதி எனக்கருளியவாறார் பெறுவார் அச்சோவே

(9)
செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கருளியவாறார் பெறுவார் அச்சோவே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page